புதுடெல்லி, ஆக.18-
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கண்டு தேர்தல் கமிஷன் அஞ்சாது. தேர்தல் கமிஷனின் தோள் மீது ஏறி சில அரசியல் கட்சிகள் சுடுகின்றன என்று தலைமை தேர்தல் கமிஷனர் கூறினார்.
பீகார் சட்டசபை தேர்தல் நெருங்குவதையொட்டி, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடக்கிறது. வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்படவில்லை.
மேலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடந்ததாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். அந்த குற்றச்சாட்டை முன்வைத்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் நேற்று விளக்கம் அளித்தாா். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சில அரசியல் கட்சிகளின் புகார்கள், வாக்காளர்கள் இடம்பெயர்தல் ஆகியவை காரணமாக, பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் நடத்துவது அவசியம் ஆகிவிட்டது. இடம்பெயர்தல் உள்ளிட்ட காரணங்களால், சில வாக்காளர்கள் தெரிந்தோ, தெரியாமலோ ஒன்றுக்கு மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் வைத்துள்ளனர்.
ஆனால், இந்த திருத்தப்பணி குறித்து சில அரசியல் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் பொய்த் தகவல்களை பரப்பி வருவது மிகவும் கவலை அளிக்கிறது.
தேர்தல் கமிஷன் அவசரகதியில் திருத்தப்பணி மேற்கொள்வதாக கூறுவது கட்டுக்கதை. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும், வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை திருத்துவது தேர்தல் கமிஷனின் சட்டப்பூர்வ கடமை.
வாக்கு திருட்டு என்றும், ஒருவரே இரண்டு ஓட்டுகள் போட்டதாகவும் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது.
சில அரசியல் கட்சிகள், தேர்தல் கமிஷனின் தோள் மீதே ஏறி சுடுகின்றன. தேர்தல் கமிஷனின் கதவுகள் அனைவருக்கும் எப்போதும் திறந்தே இருக்கின்றன. வரைவு பட்டியல் குறித்த கோரிக்கை மற்றும் ஆட்சேபனையை தெரிவிக்கலாம். இன்னும் 15 நாட்கள் இருக்கின்றன.
வாக்குச்சாவடி அலுவலர்களும், வாக்குச்சாவடி முகவர்களும் வெளிப்படையான முறையில் இணைந்து பணியாற்றி வருகிறார்கள்.
தேர்தல் கமிஷன், அரசியல் கட்சிகளிடையே பாகுபாடு காட்டாது. ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் தேர்தல் கமிஷன் முன்பு சமம்தான். தேர்தல் முடிவுகள் வெளியான 45 நாட்களுக்குள் தேர்தல் வழக்கு தொடராமல் இருந்துவிட்டு, ‘வாக்கு திருட்டு‘ நடந்ததாக இப்போது குற்றம் சாட்டுவது அரசியல் சாசனத்துக்கு இழுக்கு.
வாக்கு திருட்டு, இரட்டை ஓட்டு போன்ற அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கண்டு தேர்தல் கமிஷன் அஞ்சாது. வாக்காளர்களும் அஞ்ச மாட்டார்கள். சிலர் செய்யும் அரசியல் குறித்து கவலைப்படாமல், அனைத்து தரப்பு வாக்காளர்களுடன் தேர்தல் கமிஷன் உறுதியாக செயல்படும்.
தேர்தல் பணியில் ஒரு கோடிக்கு மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். இத்தகைய வெளிப்படையான முறையில் ‘வாக்கு திருட்டு’ நடக்குமா?
வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாத 65 லட்சம்பேரின் பட்டியலை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவு வெளியான 56 மணி நேரத்தில், மாவட்ட கலெக்டர்களின் இணையதளத்தில் அந்த பட்டியலை வெளியிட்டு விட்டோம்.
நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களுக்கான தேர்தல் முறை, பல அடுக்குகளை கொண்டது. தேர்தல் கமிஷனின் வழிகாட்டுதல்படி, வாக்குச்சாவடி அலுவலர்கள் உதவியுடன் வாக்காளர் பதிவு அதிகாரிகள் இறுதி பட்டியலை தயாரிக்கிறார்கள்.
வாக்காளர் பட்டியல் தவறுகளை சரிசெய்வதற்கு அவர்கள்தான் பொறுப்பு. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானவுடன், அதில் திருத்தம் செய்ய கோரிக்கை விடுப்பதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வாக்கு திருட்டு நடந்ததாக சொல்பவர், ஒரு குறிப்பிட்ட தொகுதியின் வாக்காளராக இல்லாவிட்டால், அவர் சாட்சி என்ற முறையில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அவர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யாதநிலையில், அவர் புகார் சொல்லும் ஒன்றரை லட்சம் வாக்காளர்களுக்கும் தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்ப முடியுமா?
எனவே, புகார் சொல்பவர் (ராகுல்காந்தி) 7 நாட்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், அவரது ‘வாக்கு திருட்டு’ குற்றச்சாட்டு ஆதாரமற்றது, செல்லாது என்றுதான் கருதப்படும். இத்தகைய குற்றச்சாட்டு சொல்பவர், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
சூரியன் கிழக்கில்தான் உதிக்கும். ஒருவர் சொல்கிறார் என்பதற்கு வேறு திசையில் உதிக்குமா?
இவ்வாறு அவர் கூறினார்.
![]()





