செய்திகள்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அரசியல் கட்சி பிரதிநிதகளுடன் விழுப்புரம் கலெக்டர் ஆலோசனை

Makkal Kural Official

விழுப்புரம், டிச. 13–

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். சிறப்பு வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் (வடக்கு மண்டலம்) ராமன்குமார் கலந்துகொண்டு, வாக்காளர் பட்டியலில் முகவரி மாற்றம், இறப்பு போன்ற விவரங்கள் குறித்தும், புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பதற்கான விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் கடந்த மாதம் 4-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், கணக்கீட்டு படிவங்களை வாக்காளர்களிடமிருந்து விடுபாடின்றி பெறும் பணிகள் நடந்து வருகிறது. இந்திய தேர்தல் ஆணையம் 14-ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் சிறப்பு வாக்காளர் முகாமில் படிவம் 6-ஐ வழங்கி புதிய வாக்காளர்களின் பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முடியும் நிலையில் வருகிற 19-ந் தேதியன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். எனவே வாக்காளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளுக்கும், வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுவதற்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ், விழுப்புரம் வாக்காளர் பதிவு அலுவலர் முருகேசன், தாசில்தார்கள் விழுப்புரம் மகாதேவன், திருவெண்ணெய்நல்லூர் ரகுராம் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதனைத்தொடர்ந்து விழுப்புரம் அருகே திருப்பச்சாவடிமேடு, ஏனாதிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணிகளை சிறப்பு வாக்காளர் பட்டியல் மேற்பார்வையாளர் ராமன்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் சேர்க்கை குறித்த விவரத்தையும், இறப்பு மற்றும் முகவரி மாற்றம் குறித்தும் கேட்டறிந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *