செய்திகள்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில்அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகிறார்கள்:எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Makkal Kural Official

சேலம், நவ.15-–

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகிறார்கள் என்றும், தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் குளறுபடி நடப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் சென்றார். சேலம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-–

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. இந்தியா கூட்டணி கட்சியினர், பீகார் தேர்தலுக்கு முன்பாக இருந்து வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியை மோசடி என்றே குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் இந்த பணியின் நோக்கமே, உண்மையான வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதுதான்.

தமிழகத்தை பல ஆண்டுகளாக வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பெயர், இடம் பெயர்ந்த வாக்காளர்கள், போலி வாக்காளர்கள் உள்ளனர். அதையெல்லாம் இப்பணி மேற்கொள்ளும் போது நீக்கி உண்மையான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். அப்போதுதான் நியாயமான தேர்தல் நடைபெறும். கடந்த 21 ஆண்டுகளாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்படவில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் பல ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

குளறுபடி

தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி பல்வேறு இடங்களிலும் சுணக்கமாக நடக்கிறது.

இதற்கு அரசு தலையீடுதான் காரணம். இதுதொடர்பாக எங்களது கட்சி நிர்வாகிகள் முறையிட்டும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பணி முறையாக நடைபெற கூடாது என்று அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகிறார்கள்.

அவர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அரசு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நேரடியாக நியமிப்பது இல்லை. மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் அலுவலர்களாக உள்ளனர். அவர்கள்தான் இந்த பி.எல்.ஓ. அலுவலர்களை நியமிக்கிறார்கள். அப்படி நியமிக்கும் போது பல்வேறு குளறுபடிகள் உள்ளன. எனவே தேர்தல் ஆணையம் விழிப்போடு செயல்பட வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *