செய்திகள்

வரும் கல்வி ஆண்டு முதல் பாடத்திட்டங்கள் படிப்படியாக மாற்றப்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

Makkal Kural Official

சென்னை, நவ.25:

கற்றலும், கற்பித்தலும் மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் 2026–27ம் கல்வி ஆண்டு முதல் பாடத்திட்டங்கள் படிப்படியாக மாற்றப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தைப் புதுப்பிப்பதற்கான உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நேற்று நடைபெற்றது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ‘இஸ்ரோ’ தலைவர் நாராயணன், நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் மற்றும் கலைத் திட்ட வடிவமைப்புக் குழுத்தலைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் மொஹாலி, மாதிரிப்பள்ளிகள் உறுப்பினர் செயலர் சுதன், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் லதா மற்றும் குழு உறுப்பினர்கள் ஆகியோர் நேரடியாகவும், இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன அறிவியலாளர் வெங்கடேஷ்வரன், கணித அறிவியல் நிறுவன கணிதவியல் வல்லுனர் ராமானுஜம், கலிபோர்னியா பல்கலைக்கழக மூலக்கூறு வரைகலை மற்றும் கணக்கீட்டு வளமைய உயிரியல் வல்லுனர் இயக்குனர் அழகிய சிங்கம், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் ஆன்லைன் வழியாகவும் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்தவுடன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மாணவர்களுக்கு தியரியை விட செய்முறை சார்ந்த பாடம் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் பலரின் விருப்பமாக உள்ளது.மாணவர்கள் வெறுமனே பாடங்களை மனப்பாடம் செய்யாமல் புரிந்து படித்து இருக்கிறார்களா? என்பதை உறுதிபடுத்தும் வகையில் மதிப்பீடு அமைந்திருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

2026–27ம் கல்வியாண்டில் பாடதிட்டத்தில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் என்பது குறித்து ஆலோசித்துள்ளோம். புதிய பாடத்திட்டத்தை எடுத்தவுடன் அனைத்து வகுப்புகளுக்கும் ஒன்றுபோல் நடைமுறைப்படுத்தாமல், முதலில் 1 முதல் 3ம் வகுப்பு வரையிலும், அதன்பின்னர் 4 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரையிலும், பின்னர் பிளஸ்–1, பிளஸ்–2 என படிப்படியாக அமல்படுத்த முடிவு செய்துள்ளோம்.

ஏ.ஐ. உள்ளிட்ட

தொழில்நுட்பம்…

அடுத்த 10 ஆண்டு கால வளர்ச்சியையும், ஏ.ஐ. உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும். இதற்கான வரைவு பாடத்திட்டம் டிசம்பரில் தயாராகும். என்னென்ன பாடங்களுக்கு வரைவு பாடத்திட்டம் கொண்டுவரப்படும் என்பது விரைவில் முடிவு செய்யப்படும்.

சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவது தொடர்பாக நமது பக்கம் வலுவான வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சரிடம் பேசியிருக்கிறோம். நாடாளுமன்ற கூட்டத்தொடரில் என்ன செய்யலாம் என்பது குறித்தும் பேசியுள்ளோம். மத்திய அரசுடன் பேசி இதற்கான தீர்வை கொண்டுவருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *