சென்னை, டிச. 17–
வெள்ளி ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 11 ஆயிரம் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதே நேரத்தின் தங்கம் விலை மீண்டும் ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 400 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 99,200-க்கும் கிராமுக்கு ரூ. 50 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 12,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.11 உயர்ந்து 222 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ஒரே நாளில் கிலோவுக்கு ரூ. 11 ஆயிரம் உயர்ந்து ரூ. 2 லட்சத்து 22 ஆயிரம் என்ற வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
சர்வதேச அளவில் உலக நாடுகளின் மத்தியில் நிலவும் நிச்சயமற்றத் தன்மை, பல்வேறு உலக நாடுகள் தங்கள் மத்திய வங்கிகளில் தங்கத்தின் சேமிப்பு ஆகியவைகளால் தங்கம் விலை தொடர்ந்து உச்சம் பெற்று வரும் நிலையில், வெள்ளி விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.வெள்ளி வெறும் ஆபரணமாக மட்டுமல்லாமல், இயந்திரங்கள், செல்போன், மருந்து தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒரே உலோகம் விலை உயர்ந்த ஆபரணங்கள் தயாரிக்கவும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுவதாலேயே இந்த அளவுக்கு விலை உயர்வுக்கு வழிவகுத்திருக்கிறது.அதுமட்டுமின்றி, பசுமை எரிசக்தித் தொழில்நுட்பம், மின்னணு வாகனங்கள் உற்பத்தி, மின்துறை, 5ஜி உள்கட்டமைப்பு, செமிகண்டக்டர், ரோபோட்கள் தயாரிப்பு போன்றவைகளில் வெள்ளியின் தேவையை அதிகரித்து வருவதே சர்வதேச அளவில் வெள்ளி விலை உயர்வுக்கு காரணம் ஆகும்.
![]()





