சென்னை, ஜன. 10:
தமிழ்நாடு அரசு 100 புதிய காப்பு வனங்களை அறிவித்து, வனப் பாதுகாப்பு மற்றும் காலநிலை தாங்குதிறனை வலுப்படுத்துகிறது.
இந்தியாவின் தேசிய வனக் கொள்கை (1988), நீண்டகால சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, நாட்டின் புவியியல் பரப்பளவில் 33 சதவீதத்தை வனங்கள் மற்றும் பசுமை பரப்பின் கீழ் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு இந்த தேசிய இலக்கை நோக்கித் தொடர்ச்சியாக முன்னேறி வருவதுடன், தற்போது 24.47 சதவீத வனங்கள் மற்றும் பசுமைப்பரப்பைக் கொண்டு அறிவியல் பூர்வமாக மேலும் விரிவுபடுத்துவதற்கு ஒரு வலுவான சூழலியல் அடித்தளத்தை வழங்குகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் மாநிலத்தில் உள்ள பாதுக்காக்கப்பட்ட வனங்களின் பரப்பளவு சுமார் 135 சதுர கிலோமீட்டர் அளவிற்கு விரிவடைந்துள்ளது. திண்டுக்கல், தருமபுரி, மதுரை, கள்ளக்குறிச்சி, தேனி, சிவகங்கை, நாமக்கல், நீலகிரி, சேலம் மற்றும் தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில், 13,494.95 ஹெக்டேர் பரப்பளவில் புதிதாக அறிவிக்கப்பட்ட இக்காப்பு வனங்கள் பரவியுள்ளன. இவற்றுள், புதிதாக அறிவிக்கப்பட்ட தேனி மாவட்டத்தில் உள்ள ஹைவேவிஸ் வனவட்டாரமானது 2,836.33 ஹெக்டேர் பரப்பளவுடன் கூடிய மிகப்பெரிய வனவட்டாரமாகும்.
இச்சூழலில், வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், 100 புதிய காப்பு வனங்கள் அறிவிக்கை செய்யப்பட்டதனை ஆவணப்படுத்தும் விதமாக நினைவுச் சிறப்புப் பதிப்பை வெளியிட்டார். இந்த நிகழ்வின்போது, வனத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, வனத்துறைத் தலைவர் ஸ்ரீநிவாஸ் ரெட்டி, தலைமை வன உயிரினக்காப்பாளர் ராகேஷ் குமார் டோக்ரா மற்றும் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அனுராக் மிஸ்ரா ஆகியோர் பங்கேற்றனர்.
காப்பு வனங்களின் விரிவாக்கமானது, ஒன்றோடொன்று தொடர்புடைய உயிரியல் பல்வகைப் பாதுகாப்பையும், காலநிலைச் செயல்பாடுகளையும் வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சட்டபூர்வமான இக்காப்பு வனங்கள் முக்கிய வனஉயிரின வாழ்விடங்களை பாதுகாத்து, சற்றுசூழல் வழித்தடங்களை உறுதிப்படுத்தி, நீர்நிலைகளை பாதுகாக்கின்றன.
இதன் மூலம் கார்பன் சேமிப்பு அதிகரித்து, காலநிலை மாற்றத்திற்கெதிரான சூழலியல் தாங்குதன்மையும் மேம்படுகிறது. ஆகவே, நிரந்தர வனப் பாதுகாப்பு என்பது உயிரியல் பல்வகை பாதுகாப்பு, நீர்வள பாதுகாப்பு மற்றும் காலநிலை நிலைத்தன்மை ஆகியவற்றிற்கு ஒரே நேரத்தில் பங்களிக்கும் இயற்கை அடிப்படையிலான தீர்வாக விளங்குகிறது.
தீர்க்கமான, அறிவியல் அடிப்படையிலான மற்றும் சட்டப்பூர்வமாக வலுவான நடவடிக்கைகளின் மூலம், தமிழ்நாடு அரசு வனப்பாதுகாப்பில் தொடர்ந்து தலைமைத்துவனத்தை வெளிப்படுத்தி வருகிறது. மேலும், காடுகளின் நிலையான வளர்ச்சி மற்றும் காலநிலை தாங்குதிறனை மக்களின் நீண்டகால நல்வாழ்வுக்கு அவசியமான ஒரு முக்கிய சுற்றுச்சூழல் உள்கட்டமைப்பாக நிருபித்து வருகிறது.
![]()





