சென்னை, டிச. 28–
வண்ணாரப்பேட்டை பகுதியில் பெண் தவறவிட்ட 5½ சவரன் தாலிச்செயினை விரைந்து கண்டுப்பிடித்து மீட்ட போலீசார் அதை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
திருநெல்வேலி மாவட்டம், செய்துங்கநல்லூர், மேற்கு பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வரும் நஸ்ரின் (28) தனது உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளார். நஸ்ரின் அவரது உறவினர்களுடன் வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோட்டில் உள்ள வீராஸ் துணிக்கடையில் துணிகள் வாங்கிக்கொண்டு அங்கிருந்து வெளியே வந்து ஆட்டோவில் ஏறி பழைய வண்ணாரப்பேட்டை, பாண்டியன் தியேட்டர் அருகில் இறங்கிய போது, நஸ்ரின் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 5½ சவரன் தாலிச்செயின் காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து நஸ்ரின் வண்ணாரப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து மேற்படி பெண் சென்ற துணிக்கடைக்கு சென்று விசாரணை செய்து, அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளை நவீன் தொழில் நுட்ப வசதிகளுடன் ஆய்வு செய்தனர்.அப்போது கடைக்கு வெளியே சாலையில் கிடந்த தாலிச்செயினை ஒரு பெண் எடுத்து செல்வது தெரியவந்தது. அதன் பேரில் போலீசார் தீவிர விசாரணை செய்து சாலையில் கிடந்த தாலிச்செயினை எடுத்த புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பெண்ணை அடையாளம் கண்டு அவரிடமிருந்து சுமார் 5½ சவரன் தாலிச்செயின் மீட்டனர்.
அந்த தாலிச்செயினை உரிமையாளர் நஸ்ரினிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். உரிய நடவடிக்கை எடுத்து காணாமல் போன தாலிச்செயினை விரைந்து கண்டுப்பிடித்து கொடுத்த காவல் துறையினருக்கு நஸ்ரின் நன்றி தெரிவித்தார்.
![]()




