புதுடெல்லி, டிச. 22–
வட இந்தியாவில் 2 நாட்களுக்கு கடும்பனி நிலவும். இதனால் விமானங்கள், ரெயில்கள் சேவை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனி மூட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் எதிரில் இருப்பது தெரியாத அளவுக்கு கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் சாலை போக்குவரத்து மட்டுமல்லாது, விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விமானங்கள், ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
காஷ்மீரில் ‘சில்லய் கலான்’ என்னும் பனிப்பொழிவுக் காலத்தின் முதல் பனிப்பொழிவு நேற்று தொடங்கியதாக வானிலை மையம் தெரிவித்தது. ஜம்மு–காஷ்மீர் மற்றும் ஹிமாசல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவுடன் மழையும் நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான குல்மார்க், கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனாமார்கில் நேற்று கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.
மூடுபனி 2 நாட்களுக்கு வட இந்தியா முழுவதும் நிலவும். இதனால் விமானங்கள், ரயில்கள் சேவை பாதிக்கக்கூடும். மூடுபனியின் தீவிரம் படிப்படியாக குறையக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி விமான நிலையத்தில் அடர் பனிமூட்டத்தால் நேற்று 97 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் 200 விமானங்களின் இயக்கத்தில் தாமதம் ஏற்பட்டது.
இந்த சூழலில், இன்று விமானங்கள், ரெயில்கள் சேவை சற்று மேம்பட்டிருந்தாலும் திடீர் வானிலை மாற்றங்கள் காரணமாக சேவைகள் பாதிக்க வாய்ப்புள்ளது என்பதால் பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு, விமான நிறுவனங்கள் அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளன. பயணிகள் விமான நிலையத்திற்கு வருபவதற்கு முன்பு, தங்களது விமான நிலையை இணையத்தளத்தில் அறிந்து கொள்ள வேண்டும் என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஜம்மு–காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் மூடுபனியால் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
![]()





