செய்திகள்

வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை: சர்வதேச கோர்ட் தீர்ப்பு

Makkal Kural Official

டாக்கா, நவ.18-–

மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து சர்வதேச கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா. 78 வயதான இவர், 1971-ம் ஆண்டு, இந்தியாவின் உதவியுடன் வங்காளதேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத் தந்த முஜிபுர் ரகுமானின் மகள் ஆவார்.

கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வங்காளதேச பிரதமராக இருந்தார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், வங்காளதேசத்தில் மாணவர்கள் போராட்டம் வெடித்தது. முதலில், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசுப்பணியில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிரான போராட்டமாக இருந்தது.

1,400 மாணவர்கள் பலி

பின்னர், ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டமாக மாறியது. போராட்டத்தை ஒடுக்க ஷேக் ஹசீனா அடக்குமுறையை ஏவியதாக கூறப்படுகிறது. அதனால் மாணவர்கள் பலர் கொல்லப்பட்டனர். சுமார் 1,400 மாணவர்கள் பலியான தாக ஐ.நா. உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் போராட்டம் முற்றிய தால், கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி, ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு தப்பி வந்தார். அவரது அரசு கவிழ்ந்தது. அவருக்கு இந்தியா அடைக்கலம் அளித்தது.

வங்காளதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றார். ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர் அல்லது தப்பி ஓடிவிட்டனர்.

ஷேக் ஹசீனா மீது சொந்த நாட்டு மக்களை கொன்று குவித்தது, கொலை முயற்சி, சித்ரவதை, இதர மனிதத்தன்மையற்ற செயல்கள் உள்பட 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டன. அந்த குற்றங்களை விசாரிக்க வங்காளதேசத்தின் சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் மாற்றி அமைக்கப்பட்டது.

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவிடம் இடைக்கால அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் இந்தியா பதில் அளிக்கவில்லை.

ஷேக் ஹசீனா அரசில் உள்துறை மந்திரியாக இருந்த அசாதுசமான் கான் கமால், போலீஸ்துறை தலைவராக இருந்த சவுத்ரி அப்துல்லா அல் மாமுன் ஆகியோருக்கு எதிராகவும் விசாரணை நடந்தது. இவர்களில், சவுத்ரி அப்துல்லா அல் மாமுன், அப்ரூவராக மாறிவிட்டார்.

ஷேக் ஹசீனா தலைமறைவு

ஷேக் ஹசீனாவும், கமாலும் தலைமறைவானதாக தீர்ப்பாயம் அறிவித்தது. கடந்த மாதம் 23-ந் தேதி விசாரணை முடிவடைந்தது. 54 சாட்சிகள் சாட்சியம் அளித்தனர்.

இந்நிலையில், வங்காளதேசத்தின் சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் நேற்று இவ்வழக்கில் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. ஷேக் ஹசீனா குற்றவாளி என்று கூறிய தீர்ப்பாயம், அவருக்கு மரண தண்டனை விதித்தது.

தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நடந்த மாணவர்கள் போராட்டத்தை கொடூரமாக ஒடுக்கியதற்கு பின்னணியில் ஷேக் ஹசீனா இருந்தார் என்பதை அரசுத்தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளது.

நூற்றுக்கணக்கான போராட்டக் காரர்கள் கொல்லப்பட்ட வன்முறைக்கு மூளையாகவும், கட்ட மைத்தவராகவும் அவர் இருந்துள்ளார்.

நிராயுதபாணியான போராட்டக் காரர்கள் மீது ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவிட்டது, ஆத்திர மூட்டும் அறிக்கைகளை வெளியிட்டது, ஏராளமான மாணவர்கள் கொல்லப்படுவதற்கு வழிவகுத்த நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளித்தது ஆகியவற்றுக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

தனது அறிக்கைகள் மூலம் வன்முறையை தூண்டி விட்டார். மாணவர்களை தாக்கியவர்கள் மீது அவர் நடவடிக்கை எடுக்கவில்லை.

போராட்டக்காரர்களுக்கு எதிராக ஹெலிகாப்டர்களையும், உயிருக்கு ஆபத்தான ஆயுதங்களையும் பயன்படுத்த உத்தரவிட்டுள்ளார். மொத்தத்தில், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத் துள்ளார். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *