நியூயார்க், டிச. 23–
வங்கதேசத்தில் நிலவி வரும் வன்முறையில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் குறித்து ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. ‘இன்குலாப் மஞ்ச்’ என்ற மாணவர் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ஷெரீப் ஓஸ்மான் ஹாதி என்பவர் அடையாளம் தெரியாத நபரால் கடந்த வாரம் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து வங்கதேசம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பின்னர் இந்து இளைஞரான தீபு சந்திர தாஸ் என்பவரை அடித்துக் கொன்றதுடன், அவரது உடலை மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு தீயிட்டு கொளுத்தினர். இதனைக் கண்டித்து டெல்லி, திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள வங்கதேச தூதரகங்களுக்கு வெளியே இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் 3 தூதரகங்களிலும் விசா சேவைகளை நிறுத்துவதாக வங்கதேசம் அறிவித்துள்ளது.
டெல்லியில் போராட்டம்இந்த நிலையில் டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்துக்கு வெளியே பல்வேறு இந்து அமைப்பினர் ஒன்றிணைந்து இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து, அப்பகுதியைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் வங்கதேச தூதரகங்களுக்கு வெளியே நடைபெற்று வரும் போராட்டம் குறித்து விளக்கமளிக்க, வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரை நேரில் ஆஜராக அந்நாட்டு வெளியுறவுத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் வன்முறை குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறுகையில், வங்கதேசத்தில் வன்முறை குறித்து நாங்கள் மிகவும் கவலை கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
ஐநா பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறுகையில், அது வங்கதேசமாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த நாட்டிலாவது சரி, பெரும்பான்மை இல்லாத மக்கள் பாதுகாப்பாக உணர வேண்டும். தற்போது வங்கதேசத்தில் அனைத்து மக்களும் பாதுகாப்பாக இருக்கும் சூழலை உறுதி செய்ய வேண்டும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வங்கதேச இடைக்கால அரசு மேற்கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம் என தெரிவித்தார்.
![]()





