டாக்கா, டிச. 30–
வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா காலமானார். அவருக்கு வயது 80. இவர் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான கலிதா ஜியா இருதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக, கடந்த நவம்பர் மாதம் 23–ந்தேதி டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது. எனினும் அவரது உடல்நிலை சீராகவில்லை. அவருக்கு சுவாசப் பிரச்சினை அதிகரித்து, உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்தது, அதையடுத்து அவர் வென்டிலேட்டர் உதவியுடன் நீண்ட நாள்களாக கவலைக்கிடமான நிலையில் இருந்து வந்தார். சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்ததால் தொடர்ந்து டயாலிசிஸ் செய்யப்பட்டு, அவருக்கு இருதயக் குழாயிலும் பிரச்சினை கண்டுபிடிக்கப்பட்டது.
டிசம்பர் 11ம் தேதி முதல் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை 6 மணியளவில் அவர் உயிரிழந்ததாக அவரது கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ராணுவ அதிகாரியை
மணந்தார்…
1945ம் ஆண்டில் பிறந்த கலிதா ஜியா, 1960ல் அப்போதைய ராணுவ அதிகாரியான ஜியாவுர் ரஹ்மானை திருமணம் செய்து கொண்டார். வங்கதேச சுதந்திரப் போரில் முக்கிய பங்காற்றிய ரஹ்மான், பிற்காலத்தில் முஜிபூர் ரஹ்மான் கொல்லப்பட்ட பிறகு ஏற்பட்ட அரசியல் குழப்பம் முடிவில் அதிபராக பொறுப்பேற்றார்.
ஜியாவுர் ரஹ்மானின் மனைவி கலிதா ஜியா, 1981ல் தனது கணவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அரசியலுக்கு வந்தார். 1984ம் ஆண்டு முதல் பிஎன்பி கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து இருக்கிறார். கடந்த 1991 – 96 மற்றும் 2001 – 2006 என இரு முறை வங்கதேச பிரதமராக இருந்த கலிதா ஜியா, ஊழல் வழக்குகளில் சிக்கி 17 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர்.
இவரது கட்சி பிஎன்பி கடந்த 3 தேர்தல்களைப் புறக்கணித்துவிட்டது. இருந்தாலும் கலிதா ஜியா முக்கியமான அரசியல் கட்சி தலைவராக திகழ்ந்து வந்தார்.
17 ஆண்டுகளாக லண்டனில் வாழ்ந்து வந்த கலிதா ஜியாவின் மூத்த மகன் தாரிக் ரஹ்மான், சில நாட்களுக்கு முன்புதான் வங்கதேசம் திரும்பியது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச அரசியலில் ஷேக் ஹசீனாவுக்குப் பெரும் சவாலாகத் திகழ்ந்த கலீதா ஜியாவின் மறைவு அந்நாட்டின் அரசியல் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோடி இரங்கல்
இந்திய பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது:–
“வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும் பிஎன்பி கட்சியின் தலைவருமான பேகம் கலிதா ஜியா காலமான செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், வங்கதேச மக்களுக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் துயர இழப்பைத் தாங்கிக்கொள்ள அவரது குடும்பத்தினருக்கு மன வலிமையை வழங்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக, வங்கதேசத்தின் வளர்ச்சிக்கும், இந்தியா– வங்கதேச உறவுகளுக்கும் அவர் ஆற்றிய முக்கியப் பங்களிப்புகள் எப்போதும் நினைவுகூறப்படும்.
2015ம் ஆண்டு டாக்காவில் அவருடன் நடத்திய அன்பான சந்திப்பை நான் நினைவுகூர்கிறேன். அவரது தொலைநோக்குப் பார்வையும், மரபும் நமது கூட்டாண்மைக்குத் தொடர்ந்து வழிகாட்டும் என்று நம்புகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
![]()





