சென்னை, ஜன. 6:
தென்கிழக்கு வங்கக்கடலை ஒட்டிய இந்தியப் பெருங்கடலில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகி வலுப் பெற்றுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரத்துடன் இருக்கும். ஆனால் இம்முறை டிசம்பரில் வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் பொழியவில்லை. கடும் பனி நிறைந்த மாதமாகவே டிசம்பர் இருந்தது.
இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது. மேலும் இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு–வடமேற்கு திசையில் இந்திய பெருங்கடல் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இன்று முதல் 9-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
9-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
10-ந்தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()





