சென்னை, அக். 24–
தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. மேலும் தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ வலுவடையும் என சொல்லப்பட்டது. ஆனால் அந்த நிலை அப்படியே மாறியது. இந்த நிலையில் தற்போது வங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாகியுள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
வங்கக் கடலில் தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை நிலவரப்படி வலுவிழந்தது; இது, தெற்கு கர்னாடக பகுதிகளுக்கு நகர்ந்துள்ளது. தென் கிழக்கு அரபிக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக வடமேற்கு திசையில் நகர்ந்துள்ளது. இது, வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இன்று நகரக்கூடும்.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு, வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து, மேலும் வலுவடையக் கூடும்.இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வங்கக்கடலில் உருவாகி இருக்கும் இந்த அமைப்பு ஆந்திரா நோக்கி சென்றால், தமிழகத்துக்கு மழை உள்ளிட்ட எந்த தாக்கமும் ஏற்படாது. அதுவே சென்னைக்கு அருகே கடந்து, ஆந்திரா சென்றால், வட தமிழகத்தில் அதிலும் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும்.
தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 29 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் தற்போது உருவான 2வது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.
![]()





