* சின்னத்திரையில் நகைக்சுவை நடிகராக அறிமுகம்
* விஜய், தனுஷ், அஜித்துடன் நடித்தவர்
சென்னை, செப். 19–
பிரபல திரைப்பட நடிகர் ‘ரோபோ சங்கர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 46. சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் சத்தியராஜ், தனுஷ், சிவகார்த்திகேயன் திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
முதலமைச்சர் ஸ்டாலின், அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கமல், விஜய், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் ‘ரோபோ’ சங்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை ரோபோ சங்கரின் இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.
மதுரையை சேர்ந்த ‘ரோபோ’ சங்கர் காமராசர் பல்கலைக்கழத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். பள்ளி, கல்லூரி நாட்களிலேயே ‘மிமிக்ரி’ உள்ளிட்ட திறமைகளை வளர்த்துக் கொண்டவர். சுற்றுவட்டார கிராமங்களில் திருவிழாக்களில் நடக்கும் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். கட்டுமஸ்தான உடலில் வெள்ளை நிற சாயம் பூசிக் கொண்டு ரோபோ போல நடனமாடியதால் இவருக்கு ‘ரோபோ’ சங்கர் என்ற பெயர் வந்தது.
தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய ‘அது இது எது’ நிகழ்ச்சியில் ‘சிரிச்சா போச்சு’ என்ற சுற்றில் தொடர்ந்து ‘ரோபோ’ சங்கரின் நகைச்சுவை இடம்பெறும். இந்த நிகழ்ச்சியை தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தும் இடமாக அவர் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.
எம்ஜிஆர், விஜயகாந்த், கமல்ஹாசன் போன்றோரின் உடல்மொழியுடன் கூடிய மிமிக்ரியை அப்படியே செய்து காட்டி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றவர்.
‘தீபாவளி’யில் அறிமுகம்
‘தீபாவளி’ என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித் திரைக்கு அறிமுகமானார். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’வில் படம் முழுக்க பெரும்பாலான காட்சிகளில் வரும் ஒரு கதாபாத்திரத்தில் ‘ரோபோ’ சங்கர் நடித்தார். ‘சவுண்டு சங்கர்’ என்ற அந்த கதாபாத்திரத்தை சிறப்பாகவே செய்திருந்தார். இப்படத்துக்கு பிறகு பேர் சொல்லும்படியான கதாபாத்திரங்கள் அவருக்கு கிடைக்கத் தொடங்கின. ‘வாயை மூடி பேசவும்’ படத்தில் ‘மட்டை ரவி’ என்ற சின்ன கேரக்டரில் தனிக் கவனம் ஈர்த்தார்.
குறிப்பாக, தனுஷ் நடித்த ‘மாரி’ படத்தில் படம் முழுக்க அவருடனே வரும் கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடித்திருந்தார். இதில் அவர் பேசும் மாடுலேஷனும், வசனங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.
பிறகு விஷ்ணு விஷால் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் அவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன்பாக ‘அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும்’ என்ற வசனத்தை திரும்பத் திரும்ப பேசி ரவி மரியா கும்பலை குழப்பி விடும் காட்சிக்கு சிரிக்காதவர்களே இருக்க முடியாது.
சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’, ‘ஹீரோ’, விஷாலின் ‘இரும்புத்திரை’, ‘மாரி 2’,அஜித்தின் ‘விஸ்வாசம்’, சிலம்பரசனின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிப்பும் மறக்க முடியாது. விஜய் சேதுபதி, சிம்பு உள்ளிட்ட நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடிக்கத் தொடங்கினார். ‘அம்பி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இவரது மனைவி பிரியங்காவும் சின்னத்திரை நடிகை மகள் இந்திரஜா ‘பிகில்’ படத்தில் விஜய் உடன் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் தன் மகள் இந்திரஜாவுடன் ரோபோ சங்கர் போடும் ரீல்ஸ் வீடியோக்களும் அவ்வப்போது வைரலாகும்.
உடல் நலம் பாதிப்பு
2023ம் ஆண்டு அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டது. மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு, சிகிச்சை பெற்றார். வெகுவாக உடல் எடை குறைந்து பிறகு மீண்டார். மீண்டும் படங்களிலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். 2 நாட்களுக்கு முன்பு ‘‘காட்ஸ் ஜில்லா’’ படத் துவக்க விழா தளத்தில் ரத்த வாந்தி எடுத்தார். உடனடியாக அவரை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இதற்கிடையில் அவரது உடல்நிலை நேற்று மோசம் அடைந்தது. ‘வெண்டிலேட்டர்’ உதவியுடன் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அது சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார்.
ரோபோ சங்கரின் மறைவு செய்தி கேட்டு அவரது குடும்பத்தினர் உறவினர்கள் கதறி அழுதனர். இவரது மறைவு திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
துணை முதலமைச்சர்,
தனுஷ், சிவகார்த்திகேயன்
சென்னை வளசரவாக்கம் பகுதியில் நடிகர் ரோபோ சங்கரின் வீடு உள்ளது. அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காகவும், பிரபலங்களின் அஞ்சலிக்காகவும் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் சத்தியராஜ்,தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி, விஜய்காந்தின் மகன்கள் விஜய் பிரபாகரன், சண்முக பாண்டியன், செந்தில், எம்.எஸ். பாஸ்கர், தாமு, தாடி பாலாஜி பாடகர் மனோ, நளினி, ரேகா உள்ளிட்ட நடிகைகள், விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தி, ரோபோ சங்கரின் மனைவி மற்றும் மகளுக்கு ஆறுதல் கூறினார்கள்.
ஸ்டாலின் இரங்கல்
ரோபோ சங்கர் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரைக்கலைஞர் ரோபோ அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி, சின்னத்திரை வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்ற கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
அண்ணா திமு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–
‘‘பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகரும், கழக நட்சத்திரப் பேச்சாளருமான ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.சிறு சிறு விழா மேடைகளில் தொடங்கி, தொலைக்காட்சி, வெள்ளித்திரை என தனது தனித்துவ நடிப்புத் திறமையால் படிப்படியாக முன்னேறி வந்து, தனது இயல்பான நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்த அன்புச் சகோதரர் ரோபோ சங்கரின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத்துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’’ என கூறியுள்ளார்.
விஜய்
நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘நண்பர் ரோபோ சங்கர் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர். நண்பர் ரோபோ சங்கர் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்’’ எனக் கூறியுள்ளார்.
கமலஹாசன்
நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
‘ரோபோ சங்கர். ‘ரோபோ’ புனைப்பெயர் தான். என் அகராதியில் நீ மனிதன் ஆதலால் என் தம்பி. போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய். என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே’ என்று கூறியுள்ளார்.
பா.ஜ.,தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களும், நடிகர்கள் விஷால், கார்த்தி, சிம்பு மற்றும் இயக்குனர் எழில், இயக்குனரும், நடிகருமான வெங்கட் பிரபு , நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
![]()





