சென்னை, டிச. 16:
ரெயில் பெட்டிகள் மீது கற்களை வீசினால், அவர்கள் சிறுவர்களாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரெயில்வே பாதுகாப்புப் படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை உள்ளிட்ட தெற்கு ரயில்வே மண்டலப் பகுதிகளில் ஓடும் ரயில்கள் மீது கற்களை வீசும் சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன. சென்னையிலிருந்து திருநெல்வேலி சென்ற ‘வந்தேபாரத்’ ரயில் மீது விருத்தாசலம், தாழநல்லூர் இடையே மணலூர் கிராமத்தில் சிலர் கற்களை வீசினர். இதில் ரயில் பெட்டிககளின் கண்ணாடிகள் சேதமடைந்தன.
தெற்கு ரயில்வே மண்டலத்தில் 2023 ஆம்ஆண்டும் விழுப்புரம் பிரிவில் ரெயில் மீது கற்கள் வீசப்பட்டதாக ஒரு வழக்குப்பதிவாகியுள்ளது. அதில் 2 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2024- ஆம் ஆண்டு 6 கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் 4 சம்பவங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் இதுவரை 6 கல்வீச்சு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் 5 சம்பவங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விருத்தாசலம் பிரிவில் நிகழ்ந்த சம்பவம் தொடா்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்வீச்சு சம்பவங்கள் குறித்து சென்னை எழும்பூர் நிலைய ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் ஜெபாஸ்டியன் கூறுகையில், ரெயில்கள் மீது கற்கள் வீசுவது குற்றமாகும். சிறுவர், பெரியவர் என யார் வீசினாலும், கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்படும். சம்பந்தப்பட்டோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறைந்தது ரூ.5 ஆயிரம் அபராதத்துடன், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றார்.
![]()





