புதுடெல்லி, செப்.25-
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. ரெயில்வே ஊழியர்களின் செயல்திறனை அதிகரிப்பதற்காக மத்திய அரசு ஆண்டுதோறும் தீபாவளி போனஸ் வழங்கி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு போனஸ் வழங்குவதற்கான ஒப்புதலை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபை நேற்று அளித்தது.
இந்த ஒப்புதலின்படி மொத்தம் 10 லட்சத்து 91 ஆயிரத்து 146 ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான உற்பத்தித்திறன் சார்ந்த போனசாக ரூ.1,865.68 கோடி வழங்கப்படுகிறது.
இதில் தகுதியுள்ள ஒவ்வொரு ரெயில்வே ஊழியருக்கும் 78 நாட்களுக்கான அதிகபட்ச தொகையாக ரூ.17,951 கிடைக்கும். இது தண்டவாள பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரெயில் மேலாளர்கள் (காவலர்), நிலைய மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயிண்ட்ஸ்மேன், மற்றும் பிற குழு ‘சி’ பிரிவு ஊழியர்களுக்கு வழங்கப்படும்.
இது குறித்து ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த ஆண்டை விட கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் பயன் பெற்றனர். கடந்த ஆண்டு 11 லட்சத்து 72 ஆயிரம் ஊழியர்களுக்கு ரூ.2,029 கோடி போனசாக வழங்கப்பட்டது.
இதுதவிர மத்திய மந்திரி சபை கூட்டத்தில் கடல்சார் துறையை மேம்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது. கப்பல் கட்டுதல் உள்ளிட்ட கடல்சார் துறையை புத்துயிர் பெற செய்வதற்கான திட்டத்தின் ஒட்டுமொத்த தொகுப்பின் மதிப்பு ரூ.69 ஆயிரத்து 725 கோடி ஆகும்.
இதில் கப்பல் கட்டுதல் நிதி உதவி திட்டத்துக்கு ரூ.24,736 கோடி அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் 2036-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதுபோல கடல்சார் மேம்பாட்டு நிதி திட்டத்துக்கு ரூ.25 ஆயிரம் கோடி அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர கப்பல் கட்டுதல் மேம்பாட்டு திட்டத்துக்கு ரூ.19,989 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர திறன் மேம்பாடு மற்றும் மனிதவள மேம்பாடு குறித்த ரூ.2,277.39 கோடி மதிப்பிலான அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் திட்டத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றார்.
![]()





