சென்னை, நவ. 11–
நெடுஞ்சாலைத் துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் ரூ.61.74 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 98 இளநிலை வரைதொழில் அலுவலர் உள்ளிட்ட 120 பணியிடங்களுக்கு 98 இளநிலை வரைதொழில் அலுவலர், 14 உதவியாளர் மற்றும் 8 தணிக்கை உதவியாளர் என தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை அவர் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் – சிவகாசி – விருதுநகர்- அருப்புக்கோட்டை-திருச்சுழி-நரிக்குடி- பார்த்திபனூர் சாலையில் இரயில்வே கடவு எண்.427-க்கு மாற்றாக ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி இரயில் நிலையங்களுக்கிடையே சாட்சியாபுரத்தில் 61 கோடியே 74 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலம் இது.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் டாக்டர்.ஆர்.செல்வராஜ், நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குநர் இரா.செல்வதுரை, சிறப்பு அலுவலர் (தொழில்நுட்பம்) ஆர்.சந்திரசேகர், தலைமைப் பொறியாளர் (நெ) திட்டங்கள் ஆர்.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
![]()





