புதுக்கோட்டை, நவ. 10–
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ரூ.223 கோடி மதிப்பில் முடிவுற்ற 577 திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.202 கோடியில் 103 புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். 43 ஆயிரத்து 993 பயனாளிகளுக்கு ரூ.341 கோடியே 77 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 37 ஆயிரம் பேருக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. தகுதியுள்ள மகளிர் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 கொடுக்கப்படும்.
மகளிருக்கு ரூ.1000 கொடுப்பது சாத்தியமில்லை என அண்ணா தி.மு.க.வினர் கூறினர். மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை பாதியில் நிறுத்தி விடுவார்கள் என வதந்தி பரப்பினர்.
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது. நமது திட்டங்களை பிற மாநிலங்கள் முன்மாதியாக எடுத்துக்கொண்டுள்ளன.
ரூ.27 ஆயிரம் கோடி
உரிமைத் தொகை
இதுவரை மகளிர் உரிமைத்தொகையாக ரூ.27,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. எங்கள் அண்ணன் மாதந்தோறும் கொடுக்கும் சீர் மகளிர் உதவித்தொகை என மகளிர் கூறுகின்றனர். வதந்திகளை நம்பாதீர்கள். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வரும்போதும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடரும்.
நியூயார்க் தேர்தலில் கட்டணமில்லா பேருந்து பயணம் வாக்குறுதியை தந்ததால் வெற்றி பெற்றுள்ளனர். கனடாவிலும் பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தி.மு.க.வின் பல திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும், நம் பணி மக்களுக்கு பணி செய்வதே.
தி.மு.க. திட்டங்கள் குறித்து மக்கள் பேசும்போது பெருமையாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சி 2.0 உறுதியாகி விட்டது. தி.மு.க.வுக்கு தான் வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
தி.மு.க. திட்டங்களால்
எதிரிகளுக்கு அச்சம்
வாக்குகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள் பெயர் இடம் பெற்றிருக்கிறதா? என்று ஆராயுங்கள். எஸ்ஐஆர் நடைமுறையின்போது வாக்காளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.
திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் எதிரிகளுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
6 புதிய அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.
* புதுக்கோட்டை அறந்தாங்கி நீலகொண்டான் ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகள் ரூ.15 கோடியில் புனரமைக்கப்படும்.
* கீரமங்கலம் பகுதியில் விவசாய விளைபொருட்களுக்கான குளிர்பதன கிடங்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புதுக்கோட்டையில் டைடல் பார்க் அமைக்கப்படும்.
* ஆவுடையார்கோவில் ஊராட்சி, வடகாடு ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் ரூ.10 கோடியில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும்.
* கந்தவர்கோட்டை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.
* கிரமங்கலத்தில் காய்கறிகளை பாதுகாக்க ரூ.1.60 லட்சம் மதிப்பீட்டில் குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு, எஸ். ரகுபதி, கே.ஆர். பெரியகருப்பன், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ. மெய்யநாதன், நாடாளுமன்றஉறுப்பினர்கள் திருச்சிசிவா, ஆ. ராசா, துரைவைகோ, கே.நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர் வீ.முத்துராஜா, தி.ராமச்சந்திரன், எம்.சின்னதுரை, பிரபாகரன், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
![]()





