சென்னை, டிச. 22:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் 22 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 16 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவிலும் மற்றும் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் 68 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்.
மேலும், 9 புதிய காவல் நிலையங்களையும், புதிதாக உருவாக்கப்பட்ட உத்திரமேரூர், வேளாங்கண்ணி மற்றும் பள்ளிப்பாளையம் ஆகிய மூன்று புதிய காவல் உட்கோட்டங்களையும் திறந்து வைத்தார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் 9 கோடியே 73 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மகளிர் காவலர் விடுதி; கிருஷ்ணகிரியில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் பல்பொருள் அங்காடி மற்றும் திருவாரூர் மாவட்டம் – முத்துப்பேட்டையில் 11 கோடியே 35 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் பாளையம்; என மொத்தம் 22 கோடியே 8 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய்செலவில் கட்டப்பட்டுள்ள காவல்துறை கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
9 புதிய காவல் நிலையங்கள்
கோயம்புத்தூர் மாவட்டம் – நீலாம்பூர், சிவகங்கை மாவட்டம் – கீழடி, திருநெல்வேலி மாவட்டம் – மேலச்செவல், திருப்பூர் மாவட்டம் – பொங்கலூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் – களமருதூர், நாமக்கல் மாவட்டம் – கொக்கராயன்பேட்டை, மதுரை மாநகரம் – சிந்தாமணி மற்றும் மாடக்குளம், தருமபுரி மாவட்டம் – புலிக்கரை ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 9 காவல் நிலையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் – உத்திரமேரூர், நாகப்பட்டினம் மாவட்டம் – வேளாங்கண்ணி மற்றும் நாமக்கல் மாவட்டம் – பள்ளிப்பாளையம் ஆகிய இடங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட மூன்று புதிய காவல் உட்கோட்டங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
செங்குன்றத்தில் 13 கோடியே 54 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான 53 பணியாளர்கள் குடியிருப்புகள்;
செங்குன்றத்தில் 3 கோடியே 41 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையம் என மொத்தம் 16 கோடியே 96 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
புழலில் சென்னை மத்திய சிறை – I மற்றும் மத்திய சிறை – II ஆகிய சிறைகளின் அங்கீகரிக்கப்பட்ட அடைப்பு எண்ணிக்கை முறையே 1250 மற்றும் 2000 ஆகும். வேலை நாட்களில் தினமும் சுமார் 700 சிறைவாசிகளின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சிறைவாசிகளை நேர்காணல் காண சிறைகளுக்கு வருகை புரிகின்றனர். நீண்ட நேர வரிசையில் நிற்பதைத் தவிர்க்கவும், காத்திருப்பு நேரத்தில் பார்வையாளர்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்கும் பொருட்டும், சென்னை மத்திய சிறை வளாகத்தில் 3300 சதுர அடி பரப்பளவில், 68 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பார்வையாளர்கள் காத்திருப்பு கூடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் – நாகர்கோவிலில் 4 கோடியே 17 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத்தளத்துடன் கூடிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, எஸ்.எஸ். சிவசங்கர், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், காவல்துறை தலைமை இயக்குநர் (பொறுப்பு) அபய் குமார் சிங், தீயணைப்பு துறை இயக்குநர் சீமா அகர்வால், காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் வினித் தேவ் வான்கேடே, சிறைகள் துறை தலைமை இயக்குநர் மகேஷ்வர் தயாள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
![]()





