யானை தந்தத்தை விற்க முயன்ற 8 பேர் கைது
செய்திகள்

ரூ.2 கோடி மதிப்பிலான யானை தந்தத்தை விற்க முயன்ற 8 பேர் கைது

Makkal Kural Official

செங்கல்பட்டு, ஜூலை.6-

ரூ.2 கோடி மதிப்பிலான யானை தந்தத்தை கடத்தி விற்க முயன்ற பெண் உள்பட 8 பேரை செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே வனத்துறையினர் கைது செய்தனர்.

சென்னை ஜமாலியா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 57). இவர் கடந்த 1983-ம் ஆண்டு நைஜீரியா நாட்டுக்கு வேலைக்காக சென்றார்.

அப்போது, அங்கு யானை தந்தம் கடத்தலில் ஈடுபட்ட அந்த நபர், அங்கிருந்து 2 யானை தந்தங்களை தமிழகத்துக்கு கடத்தி வந்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதை விற்பனை செய்யாமல் தனது வீட்டிலேயே வைத்திருந்தார்.

இநத நிலையில் பெங்களூருவை சேர்ந்த தனது நண்பர் மூலமாக திருச்சி பகுதியில் உள்ள ஒரு யானை தந்த கடத்தல் கும்பலுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டது. தன்னிடம் இருந்த 2 யானை தந்தங்களை ரூ.2 கோடிக்கு விற்க முடிவு செய்தார்.

அதன்படி நேற்று முன்தினம் மாலை காரில் 2 யானை தந்தங்களையும் எடுத்து கொண்டு 7 பேருடன் திருச்சி நோக்கி சுரேஷ் சென்று கொண்டிருந்தார். இது தொடர்பாக செங்கல்பட்டு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் செங்கல்பட்டு வனச்சரகர் வித்யாபதி தலைமையிலான வனத்துறையினர் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமான காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 2 யானை தந்தங்கள் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து காரில் இருந்த சுரேஷ் (57), சென்னையை சேர்ந்த விக்னேஷ் (24), லலிதா சுரேஷ் (58), பெங்களூருவை சேர்ந்த சுரேஷ் (61), நாகப்பட்டினத்தை சேர்ந்த சபரி ராஜன் (35), ரஷீத் அகமது (21), ராமநாதபுரத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (41), ஷாகுல் ஹமீது (46) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான யானை தந்தத்தை பறிமுதல் செய்து அவர்களை செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

#trending news #trending news tamil #makkalkural #மக்கள்குரல் #சென்னை #livenews

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *