செய்திகள் முழு தகவல்

ரூ.120 கோடியில் சீரமைப்பு பணி: சோழவரம் ஏரி பாதுகாப்பாக உள்ளது

Makkal Kural Official

சென்னை, டிச. 15:

ரூ.120 கோடியில் சோழவரம் ஏரியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏரி பாதுகாப்பாக உள்ளது என்று சென்னை மண்டல நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்று சோழவரம் ஏரியாகும். இந்த ஏரி திருவள்ளூர் மாவட்டம். பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி 1891–ல் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு, 1970–ம் ஆண்டு காலத்திலிருந்து மூன்று முறை கரையின் மட்டத்தை உயர்த்தி 18.33 மீட்டர் உயரத்திலிருந்து தற்போது 19.96 மீட்டர் வரை அதாவது கரையின் உயரம் 5 அடிக்கு மேல் உயர்த்தப்பட்டு கொள்ளளவு 108 மில்லியன் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

சோழவரம் ஏரியின் மண் அணை அமைந்துள்ள இடத்தின் புவியியல் அமைப்பினாலும் அக்காலத்தில் மண் அணை அமைக்க பயன்படுத்தப்பட்ட மண்ணின் தன்மையினாலும் 1980 முதல் தொடர்ந்து மண் அணையில் சரிவும் விரிசல்களும் ஏற்பட்டு அவ்வப்போது சீர் செய்யும் பணிகளும் பலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வந்தது.

இவ்வணையில் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்ய மத்திய நீர் ஆணையம் (CWC) மற்றும் அணைகள் பாதுகாப்பு இயக்கத்தின் அறிவுரைகளின்படியும் பல்வேறு கட்ட சோதனை மற்றும் வடிவமைப்புக்கு பிறகு ரூ.120 கோடி மதிப்பீட்டில் சோழவரம் எரிக்கரையை புனரமைக்க முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த முன்மொழிவின் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் தொலைக்கல் 2800 மீட்டர் முதல் தொலைக்கல் 3150 மீட்டர் வரை உள்ள கரையை சீரமைக்க அரசாணைப்படி ரூ.40 கோடிக்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 14.10.2025 அன்று துவங்கிய வடகிழக்கு பருவ மழையின் போத கரையின் மீது அமைக்கப்பட்ட தார் சாலையில் தொலைகல் 2500மீ முதல் தொலைகல் 2670 மீ வரை சிறு விரிசல் ஏற்பட்டுள்ளது. இவ்விரிசல்கள் அணையின் அடித்தளத்தில் அமைந்துள்ள மண் அமைப்பு மற்றும் மிகுந்த நிலத்தடி நீரோட்டமும் காரணம் என தெரிய வருகிறது.

மண் அரிப்பு பள்ளம்…

இதனிடையே சிறப்பு தொழில்நுட்பக் குழு தள ஆய்வு செய்து அணையின் பாதுகாப்பினை உறுதி செய்ய தேவையான உடனடி பாதுகாப்பு மேற்கொள்ளவும் தக்க அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும் நீர்வளத்துறை அரசு செயலரும் தள ஆய்வு மேற்கொண்டு ஆய்வு மற்றும் சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தி அணையின் உறுதி தன்மையை காக்க அறிவுரை வழங்கியுள்ளார்.

இவ்வாறான நிகழ்வினால் ஏற்படும் நிள்வட்ட விரிசலையும், கீழ்புற கரை சரிவில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பு பள்ளங்களை உடனுக்குடன் ஒப்பந்ததாரரின் உத்திரவாத காலத்திலும் அவர் சொந்த செலவில் தற்போது சீர்மைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அணையின் கரையானது நேரடி மழை பொழிவில் பாதிக்காமல் இருக்க பாதிப்படைந்த பகுதிகளில் சிமெண்ட் பெண்டோடைட் கலவை கொண்டு சரி செய்து தார்பாலின் கொண்டு மூடப்பட்டுள்ளது. மேற்கூறிய உயர்மட்ட தொழில்நுட்ப குழுவின் ஆலோசனைப்படி அணை சீரமைக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள நிலையில்படி அணையின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கு எந்த குந்தகமும் இன்றி பாதுகாப்பாக உள்ளது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *