புதுடெல்லி, ஜூலை 19–
இந்தியாவில் முதல்முறையாக, 108 பேருரிடம் ரூ.1 கோடி டிஜிட்டல் மோசடி செய்து கைது செய்யப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மேற்குவங்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
‘ஆன்லைன்’ மூலமாக சைபர் குற்றவாளிகள் பண மோசடி செய்வதை தடுக்க, சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். டிஜிட்டல் முறையில் பண மோசடியில் ஈடுபடும் கும்பலை கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.1 கோடி மோசடி செய்யப்பட்டதாக ஓய்வு பெற்ற விஞ்ஞானி பார்த்தா குமார் முகர்ஜி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 108 பேரிடம், ஒரு கும்பல் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதில் மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 9 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றவாளிகளில் 4 பேர் மகாராஷ்டிராவையும், 3 பேர் ஹரியானாவையும், 2 பேர் குஜராத்தையும் சேர்ந்தவர்கள்.
இவர்கள் மீது மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. குற்றவாளிகள், இம்தியாஸ் அன்சாரி, ஷாகித் அலி ஷேக், ஷாருக் ரபிக் ஷேக், ஜதின் அனுப், ரோஹித் சிங், ரூபேஷ் யாதவ், சாஹில் சிங், பதான், பானு மற்றும் அசோக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விசாரணையைத் தொடர்ந்து, 9 பேரும் குற்றவாளிகள் என மேற்குவங்க நீதிமன்றம் அறிவித்தது. டிஜிட்டல் கைது சைபர் மோசடி வழக்கில் நாட்டின் முதல் முறையாக 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மேற்கு வங்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டு, பொருளாதார பயங்கரவாதம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், இந்த குற்றவாளிகள் அனைவரும், தங்களுக்கு எதிராக மிக உறுதியான டிஜிட்டல் சாட்சிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது.இவர்களிடமிருந்து ஏராளமான வங்கிக் கணக்குப் புத்தகம், ஏடிஎம் அட்டைகள், சிம் கார்டுகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மோசடிப் பணத்தை நாடு முழுவதுமிருக்கும் ஏராளமான வங்கிக் கணக்குக்கு இவர்கள் பரிமாற்றம் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.சுமார் ஐந்து மாத காலம் நடைபெற்ற விசாரணையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 29 பேரிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வங்கி மேலாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2,600 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இவர்களது மோசடியில் சிக்கிப் பணத்தை இழந்தவர்கள், தங்களது வாழ்நாள் சேமிப்பை இழந்துவிட்டதாகவும், இது பொருளாதார பயங்கரவாதம் என்றும் அரசுத்தரப்பு வழக்குரைஞர் வாதத்தை முன்வைத்த நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக நிதி மோசடிக்கு ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
”போலீசார் விசாரணை பிப்ரவரி 24ம் தேதி 2025ம் ஆண்டு முடிந்தது. குற்றவாளிகள் 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இது எங்களுக்கு ஒரு மைல்கல் தருணமாக இருக்கிறது” என சிறப்பு அரசு வழக்கறிஞர் பிவாஸ் சாட்டர்ஜி கூறினார்.
![]()





