செய்திகள்

ரீல்ஸ்’களை ‘ரியாலிட்டி’ என்று மாணவர்கள் நம்பி விடக்கூடாது: முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

Makkal Kural Official

சென்னை, ஆக.23-–

”மாணவர்கள் தாங்கள் பார்க்கும், ‘ரீல்ஸ்’களை எல்லாம், ‘ரியாலிட்டி’ என்று நம்பி விடக்கூடாது; தங்களின் ரோல் மாடலை, இன்ஸ்டாகிராமில் தேடக்கூடாது” என்று சென்னையில் நடந்த குட்ஷெப்பர்டு பள்ளியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை கூறினார்.

மதநல்லிணக்கத்தை கெடுக்க நினைக்கும் சக்திகளின் ஆட்டம் அதிக நாள் நீடிக்காது’ எனவும் அவர் கூறினார்.

சென்னை நுங்கம்பாக்கம் குட்ஷெப்பர்டு பள்ளியின் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:–-

ஒரு காலத்தில் கல்வி என்பது, நமக்கு மறுக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. ஏராளமான போராட்டங்களுக்கு பிறகுதான் கல்வி கதவுகள் நமக்கு திறக்கப்பட்டது. இப்போதும் கல்விக்காக போராடும் மக்கள் இருக்கிறார்கள். கல்வியை ஊக்குவிக்கவேண்டும் என்பதற்காகத்தான், காலை உணவு திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் என்று நிறைய திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

இப்போது கூட பள்ளி மாணவர்களுக்காகவே சிறப்புப் பஸ்கள் தொடங்கியிருக்கிறோம். அனைத்து தரப்புக்கும் இத்தனை திட்டங்களை தொடங்கி எல்லோருக்கும் எல்லாம் என்று செயல்படுகிறோம். ஆனால், இந்திய அளவில், பல மாநிலங்களில் வெறுப்புணர்வு தூண்டப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு, இந்தியாவில் சிறுபான்மையினர் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள். இது எல்லாம் நிரந்தரமல்ல.

இந்தியாவின் மதநல்லிணக்கத்தை கெடுக்க நினைக்கின்ற சக்திகளின் கொட்டம் அதிக நாள் நீடிக்காது. சாதி, மத பிரிவினை பார்க்காமல், எல்லோரையும் சமமாக நடத்துகின்ற பண்பை பள்ளிக் கூடங்களிலேயே மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தும்பை விட்டுவிட்டு வாலை பிடிக்கக்கூடாது என்று சொல்லுவார்கள். அப்படித்தான், தமிழ்நாடு எப்போதும் சமத்துவப் பூங்காவாக சகோதரத்துவத்துடன் திகழவேண்டும் என்றால், மாணவர்களான நீங்கள் இப்போதே அந்த எண்ணத்துடன் வளர்ந்தால் தான் முடியும். அதனால்தான், பள்ளி நிகழ்ச்சியில் கூட, அரசியலும், அட்வைசும் பேச வேண்டியதாக இருக்கிறது.

இன்றைக்கு அறிவியல் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. உங்களுக்கு தேவையான அறிவை பெற, நிறைய வழிகள் இருக்கிறது. அதிலும் ஏ.ஐ. எனும் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி புது புரட்சியையே உண்டாக்கி கொண்டிருக்கிறது. அதற்காக, எல்லாவற்றுக்கும் ஏ.ஐ. இருக்கிறது, நாம் எதற்கு படிக்கவேண்டும் என நினைத்து விடாதீர்கள்.எந்த கண்டுபிடிப்பையும் வளர்ச்சிக்காக தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, அது உங்களது சிந்தனையை சிதைக்க அனுமதிக்க கூடாது.

அதேபோல, உங்கள் ரோல் மாடலை இன்ஸ்டாகிராமில் தேடாதீர்கள். பொழுதுபோக்கு வாழ்க்கையின் ஒரு அங்கம்தான். அதுவே வாழ்க்கை இல்லை.

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், நீங்கள் ரீல்ஸ் பார்ப்பதெல்லாம் ரியாலிட்டி (உண்மை) என்று நம்பிவிடாதீர்கள். லைக்ஸ், வியூவ்ஸ் போன்றவற்றில் கெத்து இல்லை. மதிப்பெண், பட்டம் போன்றவற்றில் தான் உண்மையான கெத்து இருக்கிறது.

படிப்பதுடன் நன்றாக விளையாடுங்கள். உடல்நலனையும் பார்த்துக்கொள்ளுங்கள். ஆசிரியர்களும் இன்றைக்கு இருக்கின்ற பிள்ளைகளுக்கு ஏற்றது போல தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

பெற்றோர்களும், பிள்ளைகள் என்ன நினைக்கிறார்கள்? என காது கொடுத்து கேளுங்கள். மனதுவிட்டு பேசுங்கள். அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் பயப்படாமல், நம்மிடம் தைரியமாக பகிர்ந்து கொள்ள செய்யவேண்டும்.

அந்த நம்பிக்கையை அவர்களுக்கு நீங்கள் கொடுக்கவேண்டும். பிள்ளைகளிடம், உனது நல்ல நண்பர் யார்? என கேட்டால், ‘எங்க அப்பா – அம்மா’ என்று சொல்லவேண்டும். அப்படி பழகுங்கள். கல்வி, – நண்பர்கள், – சூழல் – இதுதான் பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். எனவே, நல்ல ஆயராக இருந்து, பிள்ளைகளை முன்னேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி. தயாநிதிமாறன், எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் எழிலன், இனிகோ இருதயராஜ், தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் ஜோ அருண் மற்றும் குட்ஷெப்பர்டு பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *