8 பேர் கும்பல் கைவரிசை
பெங்களூரு, நவ.20-
பெங்களூருவில் பட்டப்பகலில் சினிமாவை மிஞ்சும் வகையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல் நடித்து ரூ.7 கோடி ஏ.டி.எம். பணத்தை துப்பாக்கி முனையில் 8 பேர் கும்பல் கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் தனியார் பாதுகாப்பு நிறுவனமான சி.எம்.எஸ். செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வங்கிகளிடம் இருந்து மொத்தமாக பணத்தை பெற்று, அந்தந்த வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் நிரப்பும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஜே.பி. நகரில் உள்ள எச்.டி.எப்.சி. வங்கியில் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு, ஏ.டி.எம். மையங்களில் நிரப்புவதற்காக பாதுகாப்பு வாகனத்தில் ஊழியர்கள் புறப்பட்டனர்.
அந்த வாகனத்தில் ஒரு டிரைவர், துப்பாக்கியுடன் கூடிய 2 பாதுகாவலர்கள் மற்றும் சி.எம்.எஸ். நிறுவனத்தின் ஊழியர் ஆகியோர் இருந்தனர். முதலில் ஜெயநகர் சவுத் என்ட் சர்க்கிளில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணத்தை நிரப்பிவிட்டு, அங்கிருந்து கோவிந்தபுராவில் உள்ள மற்றொரு ஏ.டி.எம். மையத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
ஜெயநகர் அருகே உள்ள அசோக் பில்லர் பகுதியில் பாதுகாப்பு வாகனம் சென்றபோது, அதனை சொகுசு காரில் வந்த சிலர் வழிமறித்து நிறுத்தினார்கள். காரில் இருந்த நபர்கள் தங்களை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் (ஆர்.பி.ஐ.) மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் எனக்கூறினர். மேலும் விதிமுறைகளை மீறி பணத்தை எடுத்து செல்வதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்தி பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.
மேலும் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஊழியர், பாதுகாவலர்களை மர்மநபர்கள் கீழே இறக்கிவிட்டனர். பின்னர் பாதுகாப்பு வாகனத்தில் 2 மர்மநபர்கள் ஏறிக்கொண்டு, வாகனத்தை ஓட்டும்படி டிரைவரை மிரட்டினர். அதன்படி, அவரும் பாதுகாப்பு வாகனத்தை ஓட்டிச்சென்றார். மர்மநபர்கள் சிலர் தாங்கள் வந்த காரில் ஏறி அந்த வாகனத்தை பின்தொடர்ந்து சென்றனர்.
பின்னர் டைரி சர்க்கிள் அருகே ஜெயதேவா மேம்பாலத்தில் பாதுகாப்பு வாகனத்தை நிறுத்தும்படி கூறினார்கள். டிரைவரை மிரட்டி, அவரது செல்போனையும் மர்மநபர்கள் பறித்து வைத்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த பணப்பெட்டியை எடுத்து காரில் வைத்தனர். அனைத்து பணப் பெட்டிகளையும் காரில் வைத்து கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இதனால் டிரைவர் செய்வது அறியாமல் திகைத்தார். அதே நேரத்தில் அதிகாரிகள் போல் நடித்து பாதுகாப்பு வாகனத்தை கடத்தி சென்றது குறித்து சி.எம்.எஸ். நிறுவனம் மற்றும் போலீசாருக்கு ஊழியர் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர்.அப்போது பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ரூ.7 கோடியே 11 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 6 முதல் 8 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளையை அரங்கேற்றி இருப்பதும், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை மர்மநபர்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
![]()





