செய்திகள்

ராமேசுவரம் மீனவர்கள் 9 பேர் கைது

Makkal Kural Official

ராமேஸ்வரம், ஜூலை 29–

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்கரையினர் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதோடு மட்டுமின்றி மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பாம்பன் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள், மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் வழக்கம்போல் இன்று அதிகாலை மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 9 பேரை கைது செய்தனர். அதோடு மீனவர்களின் விசைப்படகினையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் புத்தளம் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். நள்ளிரவு 5 மீனவர்கள் கைது

முன்னதாக நேற்று நள்ளிரவு ராமேசுவரத்தை சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

நேற்று ராமேஸ்வரத்திலிருந்து 391 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் பாரம்பர்யமாக மீன்பிடிக்கும் பாக் நீரிணை பகுதியில் நேற்று இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவரது விசைப்படகினை சிறை பிடித்து அந்தப் படகில் இருந்த படகின் உரிமையாளர் ஜஸ்டின் மற்றும் மோபின், சைமன், சேகர், டெனிசன் ஆகிய 5 மீனவர்களையும் சிறை பிடித்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஒன்றரை மாதங்களில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்ட 26 மீனவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று மேலும் 5 மீனவர்கள் சிறைபிடித்து செல்லப்பட்டிருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் சிறை பிடிக்கப்பட்ட படகுகள் ஒன்று கூட விடுவிக்கப்படாத நிலையில் மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டு வந்தனர். ஆனால் கடந்த ஒன்றரை மாதங்களில் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்ட ஒரு மீனவர் கூட விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.நேற்று நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலை நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *