புதுடெல்லி, டிச. 3:
பா.ம.க. விவகாரத்தில் மாம்பழம் சின்னம் முடக்கப்படும் என்று டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ராமதாஸ் – அன்புமணி சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
பா.ம.க.வில் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அன்புமணியின் தலைவர் பதவி காலம் முடிந்துவிட்டதால், இனி பாமகவுக்கு நான் தான் தலைவர் என இராமதாஸ் தெரிவித்துள்ளார். ஆனால், தேர்தல் ஆணையம் தன்னை பாமகவின் தலைவராக அங்கீகரித்துவிட்டது என்று அன்புமணி தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், அன்புமணி இராமதாஸ் தேர்தல் ஆணையத்தில் தவறான ஆவணங்கள் கொடுத்ததை ஏற்று அதன் அடிப்படையில் அன்புமணி இராமதாஸை தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. பா.ம.க நிறுவனர் இராமதாஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட அசல் ஆவணங்களை முறையாக ஆராயாமல் தேர்தல் ஆணையம் தவறான முடிவெடுத்துள்ளது எனக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் இராமதாஸ் தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு மீது விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நீதிபதி மினி புஷ்கர்னா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மருத்துவர் ராமதாஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பல்பீர் சிங், அன்புமணி இராமதாஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சரியான ஆவணங்களை அளித்தும் தேர்தல் ஆணையம் அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் தவறான முடிவெடுத்துள்ளது. இரு தனிநபர்கள் கட்சியை உரிமை கொண்டாடி வரும்போது, தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது; இது நீதிமன்றத்தால் ஆய்வு செய்யப்பட்டு முடிவெடுக்கப்பட வேண்டிய விஷயம் என்றும் அவர் வாதிட்டார்.
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தரப்பு, இந்த வழக்கை பொறுத்தவரைக்கும் கட்சி யாருக்கு என்று உரிமை கூறும் வழக்கம். எனவே இந்த விவகாரத்தில் உரிமையியல் வழக்கு மட்டுமே தொடுக்கக்கூடியது என்றும், ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்துள்ள மனு நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது என்றும் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரியது.
இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில் “தற்போதைய ஆவணங்களின் அடிப்படையில்தான் அன்புமணியை பாமக தலைவராக ஏற்கிறோம். பாமக தலைவர் யார் என்பதில் பிரச்சனை இருக்கிறது என்றால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம். இரு தரப்பும் பிரச்சனைக்குரியதாக இருந்தால் தேர்தல் ஆணையம் படிவம் A மற்றும் படிவம் B-யில் இரு தரப்பு கையெழுத்து போடுவதை ஏற்காமல், சின்னமும் முடக்கி வைக்கப்படும்” என்று கூறப்பட்டது.
அனைத்து தரப்பு விவாதங்களும் முடிவடைந்த நிலையில் “இந்த விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.
![]()





