பிரதமர் மோடி இரங்கல்
ஜெய்ப்பூர், ஜூலை 25–
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 மாணவர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜாலாவார் மாவட்டம் மனோகர் தானாவில் உள்ள பிப்லோடி அரசு தொடக்கப் பள்ளியில் காலை 8.30 மணியளவில் பள்ளியின் மேற்கூரை இடிந்து அங்கு அமர்ந்திருந்த குழந்தைகள் மீது விழுந்துள்ளது. அங்கு சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த இடிபாடுகளில் சிக்கிய மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு, பள்ளிக்கு வந்த அப்பகுதி கிராம மக்கள் கான்கிரீட் கற்களை அகற்றி மாணவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 4 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 17 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கைகளுக்காக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் பேரிடர் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கட்டட இடிபாடுகளில் சிக்கிய எஞ்சிய மாணவர்கள், ஆசிரியர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. மீட்பு பணியில் 4 ஜே.சி.பி. எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த விபத்தில் பலியான மாணவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இடிந்து விழுந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததாகவும், இது தொடர்பாக முன்னர் பல புகார்கள் எழுந்ததும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என உள்ளூர்வாசிகள் புகார் அளித்துள்ளனர்.
பிரதமர் இரங்கல்
விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில்,
ராஜஸ்தானில் அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து மாணவர்கள் பலியான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
பள்ளி கட்டிடம் விழுந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகாரிகள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தங்கிபுரா காவல்நிலைய அதிகாரி விஜேந்திர சிங் கூறுகையில், “6 மாணவர்கள் உயிரிழந்துவிட்டனர். 32 பேர் காயமடைந்துள்ளனர். 2 பேர் மிக மோசமாக காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் ஜலாவரில் உள்ள எஸ்ஆர்ஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். இன்று காலை 7.45 மணி அளவில் 6 மற்றும் 7ம் வகுப்பு மாணவர்களின் வகுப்பறைகளின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.” என தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் கல்வி அமைச்சர் மதன் திலாவர் கூறுகையில், “பிப்லோட் கிராமத்தில் எதிர்பாராத விதமாக இந்த விபத்து நடந்திருக்கிறது. காயமடைந்த மாணவர்களுக்கு உரிய மருத்துவ உதவிகள் கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு மாவட்ட கலெக்டர் மற்றும் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்கான முழுமையான உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.
முதல்வர் பஜன்லால்
முதல்வர் பஜன்லால் ஷர்மா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. காயமடைந்த சிறுவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை உறுதிப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவர்களின் ஆன்மா சாந்தி அடையவும் அவர்களின் குடும்பத்தினர் இந்த இழப்பை தாங்குவதற்கான வலிமையை பெறுவதற்கும் கடவுளை வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.
![]()





