நியூயார்க், ஜூலை 16–
உக்ரைனுடனான போர் நிறுத்தம் குறித்து ரஷ்ய அதிபர் புதினிடம் பேசாவிட்டால், கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று இந்தியா, சீனா, பிரேசில் நாடுகளுக்கு நேட்டோ அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ‘வரி விதிப்பு’ எச்சரிக்கை மீண்டும் சர்வதேச அளவில் சுழற்றி அடிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த 50 நாள்களுக்குள் உக்ரைனுடன் ரஷ்யா போர் நிறுத்தம் குறித்த ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்றால் ரஷ்யா மீது கடுமையான வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருக்கிறார்.
நேட்டோ செயலாளர் எச்சரிக்கை
இந்த நிலையில், நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட், “சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய மூன்று நாடுகளும் வரி குறித்து பார்க்க வேண்டும். இதனால், நீங்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவீர்கள். புதினுக்கு போன் செய்து அமைதி பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துங்கள். இல்லையென்றால், இந்த வரி விதிப்பு மூலம் பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் கடுமையாகப் பாதிக்கும்” என்று கூறியுள்ளார்.
ட்ரம்பின் நேற்றைய அறிவிப்பு படி, ரஷ்யா போர் நிறுத்தத்தில் ஒப்புக்கொள்ளவில்லை என்றால், அதனுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 100 சதவிகித வரி விதிக்கும். ட்ரம்ப் நட்பு ரீதியாக தான் இவ்வளவு நாள்களாக ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த ரஷ்யா உடன் காய் நகர்த்தி வந்தார். அதற்கு புதின் சரியாக ஒத்துழைக்காததால், வரி என்கிற ஆயுதத்தை கையிலெடுத்துள்ளார்.
![]()





