செய்திகள்

ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

Makkal Kural Official

சென்னை, நவ.19-

ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னை பாரிமுனை பகுதியில், கலெக்டர் அலுவலகம், கோர்ட் அருகே இரு ரவுடிக்கும்பல் கத்திகளுடன் விரட்டிச் சென்று மோதிக் கொண்டதால் பொதுமக்கள் அலறியடித்து ஓடியதாகவும், சென்டிரல் அருகே பல்லவன் சாலையில் இருவர் கத்தியுடன் மோதிக் கொண்டதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. தி.மு.க ஆட்சியில் தமிழகம், குறிப்பாக தலைநகர் சென்னை, ரவுடிகளின் சாம்ராஜ்ஜியமாக மாறிவிட்டது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், தூக்கத்தில் இருக்கும் ஒரு ஆட்சியில், மக்கள் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?

தலைநகரின் பிரதான சாலைகளில் ரவுடிகள் கத்தியோடு வலம் வந்து சண்டை போடுவது என்பது, இந்த நொடி, இந்த இடம் என எங்கும், எப்போதும் பாதுகாப்பு மக்களுக்கு இல்லை என்பதையே வெட்ட வெளிச்சமாக்குகிறது. ரவுடியிசத்தைக் கண்டு மக்கள் அலறி ஓடியதை வேண்டுமானால், தமிழ்நாட்டில் இதுவரை நடந்திடாத “அரசின் சாதனை” என்று இந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளம்பரம் செய்துகொள்ளலாம். தலைநகரில் தலை விரித்தாடும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *