சினிமா செய்திகள்

ரஜினி கூலி படம் ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்

Makkal Kural Official

சென்னை, ஆக. 14–

ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களை உற்சாகமடையச் செய்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இன்று உலகம் முழுவதும் கூலி திரைப்படம் இன்று வெளியானது.

கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் காலை 6 மணிக்கு சிறப்பு காட்சிகள் தொடங்கியது. ரசிகர்கள் திரையரங்குகளில் படத்தை ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் டிக்கெட் முன்பதிவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது ‘கூலி’ படம்.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் முதல்காட்சி 9 மணிக்கு தொடங்கியுள்ளது. கூலி படத்தை பார்க்க இயக்குனர் லோகேஷ், சாண்டி மாஸ்டர் மற்றும் நடிகர் சிவா ஆகியோர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டருக்கு வந்தனர். அவர்களை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இதேபோல கோயம்பேடு ரோகினி தியேட்டரில் கூலி படத்தை நடிகர் தனுஷ், லதா ரஜினிகாந்த், மகள் சவுந்தர்யா ஆகியோர் பார்த்தனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் சத்யம் திரையரங்கில் குடும்பத்துடன் படத்தை பார்த்தார்.

இதற்கிடையில், ‘கூலி’ படக்குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வரவழைத்து சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார். அது தொடர்பான புகைப்பத்தை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த லோகேஷ் கனகராஜ், “தங்களின் அன்புக்கும், வாழ்த்துக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நேற்று ‘கூலி’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு கருத்து தெரிவித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “அனைத்துத் தரப்பையும் ஈர்க்கிற மாஸ் எண்டர்டெயினராக கூலி திரைப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது.” எனக் குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

இந்த நிலையில் சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் ரஜினிகாந்திற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், ” முதல்முறையாக உங்களை சந்தித்தபோது என் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை தலைவா… திரைத்துறையில் உள்ளவர்களும் சரி, உங்களை தெரிந்தவர்களும் சரி.. உங்களை ஆழமாக நேசிப்பதற்கு காரணம் நீங்கள் ஒரு நல்ல மனிதர். விசுவாசமான ரசிகர்களின் அன்பு என்றென்றும் தொடரும். கூலி படம் வெற்றியடைய வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *