கன்னியாகுமரி, ஜூலை 25–
யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள பர்ணட்டிவிளையை சேர்ந்தவர் நாகராஜன், சுங்கவரி துறையில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் சக்தீஷ்வர் (வயது17). இவர் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று என்ஜினீயரிங் கல்லூரியில் சேர தயாராகி வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்த சக்தீஷ்வர் திடீரென மூச்சு திணறி மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை பெற்றோர் மீட்டு அருகில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குளச்சல் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. அதாவது மாணவன் சக்தீஷ்வர் உடல் பருமனால் அவதியுற்று வந்துள்ளார். தற்போது மேற்படிப்பிற்காக கல்லூரிக்கு செல்ல இருந்த நிலையில் உடல் பருமனை பார்த்து சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்யலாம் என நினைத்துள்ளார். எனவே உடல் எடையை குறைக்கும் வழிமுறைகள் குறித்து யூடியூபில் தேடியுள்ளார். அதில் கிடைத்த தகவலின்படி கடுமையான உணவு கட்டுப்பாடுகளை கடைபிடித்து வந்துள்ளார்.
அதாவது கடந்த 3 மாதங்களாக திட உணவு சாப்பிடாமல் பழச்சாறு மட்டும் குடித்து உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். தொடர்ந்து பழச்சாறு குடித்து வந்ததால் சளித் தொல்லைக்கு ஆளாகி மூச்சு விட சிரமப்பட்டு உள்ளார். இந்தநிலையில் நேற்று காலையில் அதிக சளி தொல்லையால் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த மாணவரின் இரு கண்களையும் பெற்றோர் தானம் செய்துள்ளனர்.யூடியூப் பார்த்து உடல் எடையை குறைக்க முயன்ற மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
![]()





