சிறுகதை விழாக்கள்

யானையூட்டு விழா..! விழா 23 – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

நேற்று வரை, கோயில்களில் அடைந்து கிடந்த யானைகளுக்கு இன்று முதல் சில நாட்களுக்கு விடுதலை. சந்தோஷத்தின் உச்சிக்குப் போன யானைகள் தன் அகலக் காதுகளை இன்னும் கொஞ்சம் அகலமாய் விரித்து சர் சர் சர்ரென வீசிக் கொண்டிருந்தன. தன் தந்தங்களைத் துதிக்கை கொண்டுத் தடவிப் பார்த்துக் கொண்டன. தூண் போன்ற தன் கால்களை அப்படியும் இப்படியுமாய் ஆட்டிக் கொண்டிருந்தன. இருப்பிடம் விட்டு வேறு இடம் போகத் தயாராக இருப்பதால், சொல்ல முடியாத மகிழ்ச்சியில் திளைத்து புத்துணர்ச்சி விழாவிற்குப் போகும் சந்தோஷத்தில் இருந்தன, மொத்த யானைகளும்.

சோழ மண்டலத்து யானைகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு நன்னிச் சோழனிடம் இருந்தது. அவன் பொறுப்பில் மொத்தம் ஐந்து யானைகள். களிறு ( ஆண் யானை ) பிடி ( பெண் யானை ) அத்தனை யானைகளையும் பெயரிட்டு அழைப்பான் நன்னிச் சோழன்.

அவன் அன்பாய் பெயர் சொல்லிக் கூப்பிடும் போது, தன் உயரத்தைக் குறைத்து வாலையாட்டி வளைய வளைய வரும் யானைகள், அவன் கோபங் கொண்டு,’ ஜ’ என்று அதட்டினால், தன் சின்னக் கண்களை அகலத் திறந்து, நன்னிச் சோழனை வெறிக்க வெறிக்கப் பார்க்கும்.

” என்ன யானைகளா? இன்னைக்கு இருந்து உங்களுக்கு உற்சாக வரவேற்பு, நல்ல உணவு, வெளியூர்ல இருந்து வார யானைகளாேட நட்பு, ம்ம்….. சூப்பர்… “

என்று யானைகளிடம் சொல்ல

” ம்ம்…..! “

என்று பிளிறி யானை மொழியில் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தின.

” சரி , கிளம்பலாமா? “

என்று ஐந்து யானைகளையும் கூப்பிட்டுத் திருச்சூர் வடக்கு நாதர் சிவன் கோயிலுக்குச் சென்றான், நன்னிச் சோழன். மரங்கள் குடை விரிக்க, கொட்டு, மேளம் , வானை முட்ட, தடபுடலான வரவேற்பில் உற்சாக உத்வேகத்தோடு வரவேற்கப்பட்டன. திசைகள் எல்லாம் தினவு கட்டியிருந்த யானைகள் ஒரே இடத்தில் கூடி நின்றதில் , அந்த இடமே யானைத் தீவு போல காட்சியளித்தது. பாகன்கள், யானைகள் வரிசை கட்டி நின்றனர், வடக்கு நாதர் கோயில் வளாகத்தில்.

தேங்காய், வெல்லம், அன்னாசி, வெள்ளரி, தர்பூசணி, வாழைப்பழம், என்று யானைகளின் உணவுகள் குவிந்து கிடந்தன. அசையும் சிறு சிறு மலைகளைப் போல், கூடி நின்றன,மொத்த யானைகளும்.

” நீங்க எந்த ஊர்ல இருந்து வாரீங்க ?” “மதுரை மீனாட்சியம்மன் கோயில்ல இருந்து. என் பேரு பெத்தன். இந்த யானை பேரு மீனாட்சி “

” சந்தோசம்” என்று நகர்ந்த நன்னிச் சோழன், அடுத்த யானையிடம் சென்றான்.

” நீங்க எங்க இருந்து வாரீங்க ?”

” கும்பகோணம் . என் பேரு கஜேந்திரன். என் யானை பேரு லட்சுமி “

என்றான், ஒரு யானைப் பாகன். இப்படி அங்கு நின்றிருந்த யானைகளை எல்லாம் பார்த்துப் பரவசம் கொண்ட நன்னிச் சோழன் எல்லாரையும் விசாரித்துக் கொண்டிருந்தான். மொத்த யானைகளும் தங்கள் காதுகளை அசைத்துக் கொண்டிருந்ததால், அந்த இடத்தில் கூடுதலாய் வீசியது காற்று. அதிக எடை கொண்டு அத்தனையும் ஒரே இடத்தில் நின்றதால், அந்தப் பூமிப் பகுதி சற்று கீழே சென்றிருந்தது, போன்ற உணர்வு ஏற்பட்டது.

கஜபூஜை செய்யப்பட்டு, அரிசிச் சோற்றில், மஞ்சள், நெய் கலந்து யானைகளுக்குச் சோறூட்ட ஆரம்பித்தனர், பாகன்கள். உற்சாக மிகுதியில் தலையை ஆட்டியபடியே உணவை உட்கொண்டன, யானைகள்.

நன்னிச் சோழன் , தன் கட்டுப்பாட்டில் உள்ள கிருஷ்ணன், கஜேந்திரன், லட்சுமி, பார்வதி, ராம் யானைகளுக்குச் சோறூட்ட ஆரம்பித்தான். அத்தனை யானைகளும் தங்கள் தலையை ஆட்டியபடியே உணவு உட்கொண்டன.

கிருஷ்ணன் மட்டும் கொடுக்கும் எந்த உணவையும் உட்கொள்ளமால் இருந்தான்.

” ஏய்.. கிருஷ்ணா, என்னாச்சு உனக்கு ? ஏன் சாப்பிட மாட்டேங்கிற ?

என்று நன்னிச் சோழன் அதட்ட , உணவைச் சாப்பிடாமல் தன் தலையைத் தலையை ஆட்டி

உஷ்… உஷ்… என்று கத்தியது.

” ஏய்… ஒனக்கு என்ன பிரச்சினை? ஏன் சாப்பிட மாட்டேங்கிற ? “

என்று தன் கையில் இருந்த கவை முள்ளால் குத்த , மேலும் எகிறி எகிறிக் குதித்தது.

” என்னாச்சு கிருஷ்ணா. ? வரும் போது, நல்லாத் தானே இருந்த ?

ஏன் இப்பிடி அடம் பிடிச்சிட்டுச் சாப்பிட மாட்டேங்கிற ? “

என்று கிருஷ்ணன் என்ற யானையை ஐ.ஐ.ஐ. என்று அரட்ட, நன்னிச் சோழனின் எந்த அதட்டலுக்கும் பயப்படாமல் எங்கேயோ பார்த்துக் கொண்டிந்தான், கிருஷ்ணன்.

” ஏய்.. மீனாட்சி, ஏன் சாப்பிடாம இப்படி அடம் பிடிக்கிற ?

என்று மதுரையிலிருந்த வந்த மீனாட்சி யானையை மிரட்டிக் கொண்டிருந்தான் , பாகன் பெத்தன்.

எதுவும் சாப்பிடாமல் அடம்பிடித்துக் கொண்டிருந்தது, மீனாட்சி.

” என்ன , வரும் போது, நல்லா தானே இருந்தா மீனாட்சி. இப்ப ஏன் இப்படி அடம்பிடிக்கிற? என்று பெத்தனும் அரட்ட,

மீனாட்சி எதுவும் பேசாமல் எதையோ வெறித்துப் பார்த்தபடியே இருந்தாள்.

” ஏய்.. கிருஷ்ணா. சாப்பிடாம, ஏன் எங்கயோ பாத்திட்டு இருக்க ? உனக்கு என்னாச்சு?” என்று நன்னிச் சாேழன் எகிற, கிருஷ்ணன், தூர நின்றிருக்கும் மீனாட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கிருந்த மீனாட்சியும், கிருஷ்ணனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

புத்துணர்ச்சிக்கு வந்த எல்லா யானைகளும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் பொங்கச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. மீனாட்சியும் கிருஷ்ணனும் சாப்பிடாமல் ஒன்றையொன்று பார்த்துக் காெண்டிருந்தன.

‘கிருஷ்ணன், மீனாட்சிக்கு உடம்பு முடியல போல ?’

என்று மருத்துவரை அழைத்து வந்தார்கள். வந்த இடத்தில் , மனதைப் பறிகொடுத்த கிருஷ்ணன், மீனாட்சியின் அன்பின் ஆழத்தை யார் அறிவார்கள் ? கவை முள்ளுக்கு கட்டுப்படுமா? களிறின் காதல் ?

வேல முள்ளுக்கு விலகி நிற்குமா? இந்தப் பிடியின் காதல் ?

இந்தக் களிறும் பிடியும் கொண்ட காதல், நன்னிச் சாேழனுக்கும் பெத்தனுக்கும் என்று தெரியும்? இரு யானைகளின் காதல் தெரிந்தால், அன்று யானையூட்டு விழாவில் காட்டப்படும் நிறமாலை தரிசனம், தீபாராதனைகள் கிருஷ்ணன், மீனாட்சிக்குச் செய்யப்படும் காதல் பூஜைகளாய் இருக்கும்.

அப்போது, யானையூட்டு விழா களை கட்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *