செய்திகள்

மோடிக்கு கானா நாட்டின் தேசிய விருது வழங்கி கவுரவிப்பு

Makkal Kural Official

அக்காரா, ஜூலை 3–

கானாவின் வளர்ச்சி பயணத்தில் இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

5 நாடுகள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து புறப்பட்டு முதலில், கானா நாட்டுக்கு சென்றார். கடந்த 30 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் கானா செல்வது இதுவே முதல் முறையாகும்.

கானா சென்ற பிரதமர் மோடியை அதிபர் ஜான் டிரமனி மஹாமா வரவேற்றார்.

அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் உற்சாக அவருக்கு வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடியை கவுரவிக்கும் வகையில் 21 குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து கானா நாட்டின் அதிபர் மஹாமாவை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

அதிபர் மஹாமாவுடனான பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்தன. எங்கள் உறவுகள் இருநாட்டு மக்களுக்கும் பயனளிக்கும். வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம். நிதி தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் பிற துறைகளில் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம்” என்றார்.

ஒப்பந்தங்கள் கையெழுத்து

பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு உள்ளிட்டவை தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதைத்தொடர்ந்து மோடி பேசுகையில், – கானாவில் சுமார் 2 பில்லியன் டாலர் முதலீடுகளை இந்திய நிறுவனங்கள் செய்துள்ளன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் எங்களின் பரஸ்பர வர்த்தகத்தை இரு மடங்காக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். கானாவின் வளர்ச்சி பாதையில் இந்தியா கூட்டாளியாக இல்லை. சக பயணியாக உள்ளது. யுபிஐ டிஜிட்டல் பேமேண்ட்கள் விவகாரத்தில் இந்தியா தனது அனுபவத்தை கானாவுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

உயரிய விருது

இதற்கிடையே, உலகளாவிய தலைமைத்துவத்திற்காக கானாவின் ‘ஆபீசர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார்’ என்ற தேசிய விருதைப் பிரதமர் மோடி பெற்றார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:–

‘தி ஆபீசர் ஆப் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் ஆப் கானா’ விருதை எனக்கு வழங்கியதற்காக கானா மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் நான் நன்றி கூறுகிறேன். இந்த கவுரவம் நமது இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலம் மற்றும் இந்தியாவிற்கும் கானாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *