செய்திகள்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆடிப்பூர விழா : சுயம்பு அம்மனுக்கு 3 லட்சம் பக்தர்கள் பால் அபிஷேகம்

Makkal Kural Official

மேல்மருவத்தூர், ஜூலை 29–

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 54 ஆம் ஆண்டு ஆடிப்பூர விழா கோலாகலமாக நடைபெற்றது. சித்தர் பீடம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

நேற்று விடியற்காலை 3 மணி அளவில் மங்கல இசை முழங்க குரு பீடத்தில் உள்ள பங்காரு சித்தர் திருவுருவச் சிலைக்கும், கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கும் அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது. மேலும் குரு பீடத்தில் உள்ள ஆன்மிககுரு பங்காரு சித்தர் பாதுகைகளுக்கு பாத பூஜை நடைபெற்றது.

முன்னதாக ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு சித்தர், துணைத் தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ், உமாதேவி ஜெய்கணேஷ், அகத்தியன் ஆகியோர் சுயம்பு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். அன்று இரவு 10 மணிவரை 3 லட்சம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுயம்பு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று விடியற்காலை முதலே பக்தர்கள் பால் குடங்களை தலையில் சுமந்தபடி 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அபிஷேகம் செய்து ஆதிபராசக்தி அம்மனையும், குரு பீடத்தில் உள்ள ஆன்மிக குரு பங்காரு சித்தரையும் வணங்கினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் மருத்துவம், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கமும், கோயம்புத்தூர், திருப்பூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றங்கள், சித்தர் சக்தி பீடங்களின் நிர்வாகிகளும் தொண்டர்களும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர்கள் மணி மற்றும் சரஸ்வதி சதாசிவம் ஆகியோர் தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *