மேல்மருவத்தூர், ஜன. 2–
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆங்கிலப் புத்தாண்டு விழா மிக விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி 31–ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் மங்கல இசையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் 4 மணி அளவில் ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மாலை 4.30 மணி அளவில் உலக நன்மைக்காகவும், இயற்கை வளம் பெறவும் கலச, விளக்கு, வேள்வி பூஜையை துணைத்தலைவர் ஸ்ரீ தேவி ரமேஷ், அறங்காவலர் உமாதேவி ஆகியோர் கலந்து கொண்டு பிரதான யாக குண்டத்தில் கற்பூரமிட்டு வேள்வி பூஜையை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இரவு 11.00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஆங்கிலப் புத்தாண்டு தினமான நேற்று 1-ஆம் தேதி காலை 9 மணி அளவில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வந்தடைந்த ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு கர்நாடக மாநில பொறுப்பாளர்கள் வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து குரு பீடத்தில் உள்ள ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.
ஆதிபராசக்தி அம்மனுக்கு 108 தமிழ் மந்திரங்கள் முழங்க பூஜை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 10 மணியளவில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துணைத்தலைவர்கள் கோ.ப. அன்பழகன், கோ.ப. செந்தில்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர். புத்தாண்டு தினமான நேற்று கர்நாடக, ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கருவறையில் உள்ள சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் செய்து இருமுடி செலுத்தினர், மேலும் ஏராளமான பொதுமக்கள் ஆதிபராசக்தி அம்மனை தரிசித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கர்நாடக மாநில தலைவர் ராஜகோபால், செயலாளர் உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
மேலும் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கிய தைப்பூச சக்தி மாலை இருமுடி விழா ஜனவரி 31-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் சக்தி மாலை இருமுடி செலுத்தி வருகின்றனர்.
![]()





