செய்திகள்

மேல்மருவத்தூரில் தைப்பூச ஜோதி இருமுடி விழா லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கினார்

Makkal Kural Official

மேல்மருவத்தூர், டிச. 16:

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி விழாவையொட்டி சக்தி மாலை இருமுடி விழாவை நேற்று காலை கருவறையில் உள்ள சுயம்பு அம்மனுக்கு ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் அபிஷேகம் செய்து தொடங்கி வைத்தார்.

ஆதிபராசக்தி சித்தர் பீடம் முழுவதும் வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நேற்று அதிகாலை 3 மணி அளவில் மங்கல இசை முழங்க குருபீடத்தில் உள்ள ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உருவ சிலைக்கும், அன்னை ஆதிபராசக்தி அம்மனுக்கும் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

பின்னர் இருமுடி அபிஷேகத்தை இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் காலை 5.45 மணி அளவில் துவக்கி வைத்தனர். முதலில் 9 சிறுவர், சிறுமியர்களையும் மற்றும் 9 தம்பதியர்களையும் அபிஷேகம் செய்ய வைத்து நிகழ்ச்சி துவங்கியது. பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து ஓம் சக்தி! பராசக்தி! மந்திரங்கள் முழங்க அபிஷேகம் செய்தனர்.

இவ்விழாவையொட்டி தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள செவ்வாடை பக்தர்கள் சக்திமாலை அணிந்து 5 அல்லது 3 தினங்கள் விரதம் இருந்து

ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு வந்திருந்து இருமுடி செலுத்த உள்ளனர். இந்த விழாவானது ஜனவரி மாதம் 31ந் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

பிப்ரவரி 1ந் தேதி தைப்பூச தினமான அன்று மாலை சித்தர் பீடம் அருகில் உள்ள ஜோதி ஏற்றும் வளாகத்தில் ஆன்மிக இயக்கத் தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் தைப்பூச ஜோதியை ஏற்றி வைக்க உள்ளனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை துணைத் தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ், உமாதேவி ஜெய்கணேஷ், ஆஷா அன்பழகன், ஸ்ரீலேகா செந்தில்குமார், வழக்கறிஞர் அகத்தியன் ஆகியோர் மேற்பார்வையில் ஆன்மிக இயக்கத்தினர் செய்திருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *