செய்திகள்

மேற்கு வங்காளத்தில் மருத்துவ மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்: 3 பேர் கைது

Makkal Kural Official

கொல்கத்தா, அக்.12–

மேற்கு வங்காளத்தில் மருத்துவ மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஆண்டு மேற்குவங்க மாநிலம் ஆர்.ஜி.கர் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது மேற்குவங்க மாநிலத்தில் மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. துர்காபூரில் உள்ள ஷோபாபூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. கொல்கத்தா நகரில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், ஒடிசா மாநிலம் ஜலேஸ்வர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் 2ம் ஆண்டு மருத்துவ படிப்பை படித்து வருகிறார்.

இந்த நிலையில் மாணவி நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் தனது நண்பர் ஒருவருடன் கல்லூரி வளாகத்துக்கு வெளியே உள்ள ஓட்டலுக்கு உணவு சாப்பிட சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று மருத்துவ மாணவியை மிரட்டி கடத்தி சென்றுள்ளது.

பின்னர் அங்குள்ள மறைவான இடத்தில் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இந்தச் சம்பவம் குறித்து யாரிடமாவது சொன்னால் மோசமான விளைவுகள் ஏற்படும் என மிரட்டி உள்ளனர். இந்த சம்பவத்தில் 5 பேருக்கு தொடர்பு இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த மாணவி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாணவியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். மாணவியுடன் உடன் சென்ற அவரது நண்பரிடமும் பேசினோம் என்றும் தெரிவித்தனர்.

மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார் என பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கூறுகையில், ‘தங்களது மகள் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் குறித்து மகளின் தோழிகளிடமிருந்து தகவல் கிடைத்த பின்னரே தெரியவந்தது. போலீசில் புகார் அளித்துள்ளதாகவும், எங்களது மகளுக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறோம்’ என தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் விசாரணை நடத்தி வந்த போலீசார், வழக்குடன் தொடர்புடைய 3 பேரை இன்று கைது செய்து உள்ளனர். தப்பியோடிய 2 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

எனினும், கைது செய்யப்பட்டவர்களின் விவரங்களை போலீசார் இன்னும் வெளியிடவில்லை. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், “இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை நாங்கள் கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இது மிகவும் உணர்ச்சிகரமான வழக்கு. கூடுதல் தகவல்களை நாங்கள் பின்னர் தெரிவிப்போம்” என கூறினார்.

இந்த விவகாரத்தில் மேற்கு வங்காள டாக்டர்கள் முன்னணி அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், கல்வி மையங்களில் பெண்களுக்கு தொடர்ந்து பாதுகாப்பற்ற சூழல் காணப்படுகிறது என கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கோரியுள்ளதுடன், இந்திய தலைமை நீதிபதி தானாக முன்வந்து, நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்து அந்த தனியார் மருத்துவக் கல்லூரியிடம் மாநில சுகாதாரத் துறை அறிக்கை கோரியுள்ளது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணைய குழு ஒன்று பாதிக்கப்பட்ட பெண்ணையும், அவரது பெற்றோரையும் சந்திக்க துர்காபூர் சென்றது. இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் அர்ச்சனா மஜும்தார், “மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற வழக்குகளில் காவல் துறை எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. இது மிகவும் துரதிருஷ்டவசமானது. இதுபோன்ற குற்றங்கள் அதிகரிப்பதைத் தடுக்க முதல்வர் மம்தா பானர்ஜி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *