செய்திகள்

மேட்டூர் அணை தண்ணீர் திறப்பு 65 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

Makkal Kural Official

மேட்டூர், அக். 24–

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 65,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர் அணை நீர்மட்டம் 5வது நாளாக 120 அடியாக உள்ளது. கர்னாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாகவும் கர்னாடகா அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாகவும் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நள்ளிரவில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 55,500 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இங்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்படுகிறது. இன்று பிற்பகல் 12 மணி முதல் 55,000 கன அடியிலிருந்து 65,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அணை மின் உற்பத்தி நிலையம் மற்றும் சுரங்கப்பாதை மின் உற்பத்தி நிலையம் வழியாக சுமார் 22,500 கன அடி தண்ணீரும், மீதமுள்ள நீர் உபரி நீர் போக்கிகள் வழியாகவும் வெளியேற்றப்படுகிறது. நீர் வெளியேற்றம் அதிகரிப்படுவதை அடுத்து முன்னெச்சரிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *