சேலம், நவ.22
மேகதாது அணை விவகாரத்தில் தி.மு.க. அரசு மெத்தனமாக உள்ளது என்றும், அந்த திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகத்தில் உள்ள 20 டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் என்றும் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் விமான நிலையத்தில் அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக துணை முதல்-மந்திரி சிவக்குமார், கடந்த 18-ந்தேதி அளித்த ஒரு பேட்டியில், மேகதாது அணை கட்டுவதற்கு முழு முயற்சிகள் தொடங்கப்படும். அதற்கான புதிய விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திடம் வழங்கப்படும். மேகதாதுவில் தனி அலுவலகம் கட்டப்படும் என்று தெரிவித்திருந்தார்.
மேகதாது அணை விவகாரத்தில் தி.மு.க. அரசு மெத்தனமாக உள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தில் உள்ள 20 டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும்.
ஏற்கனவே, காவிரி நதிநீர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் ஒரு தெளிவான உத்தரவை வழங்கி உள்ளது. அதாவது 15 ஆண்டுகளுக்கு காவிரி நதிநீரை தடுக்கவோ? திருப்பவோ? மடைமாற்றம் செய்யவோ? கூடாது என்றும், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்றும், கிட்டத்தட்ட 177.2 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு மாறாக கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியா கூட்டணியில் தி.மு.க. அங்கம் வகிக்கிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் உள்ளது. எனவே, முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்களான சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரிடம் பேசி இந்த பிரச்சினைக்கு சுமுக தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் 21 ஆண்டுகளாக வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இறந்தவர்கள் பெயர்கள் நீக்கப்படாமலும், போலி வாக்காளர்கள் அதிகமாகவும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதனை களைய வேண்டும் என்றால் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி அவசியம்.
ஆனால் தற்போது தி.மு.க.வினர் பல மாவட்டங்களில் கலெக்டர்களையும், அதிகாரிகளையும் மிரட்டி சரியான முறையில் பட்டியல் திருத்த பணிகள் செய்யவிடாமல் தடுக்கின்றனர். எஸ்.ஐ.ஆர். பணியில் தி.மு.க.வினரின் தலையீடு அதிகமாக உள்ளது. இதனால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் அந்த பணிகள் முறையாக நடைபெறவில்லை.
தமிழகத்தில் பிளஸ்-2 மாணவி படுகொலை உள்பட ஏராளமான கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. தி.மு.க. அரசால் ஒரு நிரந்தர டி.ஜி.பி.யை ஏன் நியமனம் செய்ய முடியவில்லை. அவர்கள் திட்டமிட்டு தங்களுக்கு சாதகமாக செயல்படுவார் என கருதி போலீஸ் அதிகாரி ஒருவரை டி.ஜி.பி. பொறுப்பு அதிகாரியாக நியமித்துள்ளனர். எனவே, தமிழகத்தில் முழுநேர போலீஸ் டி.ஜி.பி.யை நியமனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
![]()





