சென்னை, நவ.28:
அண்ணா தி.மு.க.வுக்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்திட்ட புரட்சித் தலைவி அம்மாவின் 9–ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் டிசம்பர் 5–ந் தேதி எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
இதுசம்பந்தமாக அண்ணா தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
ஜெயலலிதா நம்மையெல்லாம் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய நாள் 5.12.2016. காலத்தால் அழியாத புரட்சிகரமான பல்வேறு திட்டங்களால் தமிழ் நாட்டு மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றங்களையும், எழுச்சியையும் ஏற்படுத்திய புரட்சித் தலைவி அம்மாவின் புகழ் காலமெல்லாம் நிலைத்திருக்கும்.
டிசம்பர் 5–ந் தேதி — வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சித் தலைவி அம்மா நினைவிடத்தில், அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.
தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மரியாதை செலுத்த உள்ளனர்.
அதனையடுத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நினைவிட நுழைவு வாயில் உட்புறத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சிகளில், கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை,
ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள்
தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு, புரட்சித்தலைவி அம்மாவுக்கு மரியாதை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5–ந் தேதி அன்று, புரட்சித் தலைவி அம்மாவைப் பற்றிய நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு; மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும்
கழக உடன்பிறப்புகள் அனைவரும், அம்மா அவர்களை நினைவு கூறும் வகையில், அனைத்துப் பகுதிகளிலும் ஆங்காங்கே புரட்சித் தலைவி அம்மாவின் உருவப் படங்களை வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்டக் கழகச் செயலாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து செய்திட வேண்டும்.
அதேபோல், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும், 5.12.2025 அன்று ஆங்காங்கே புரட்சித் தலைவி அம்மா உருவப் படங்களை வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அண்ணா தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
![]()




