செய்திகள்

மெரினா கடற்கரையில் மீண்டும் களைகட்டிய ‘கலைவிழா’

Makkal Kural Official

சென்னை, டிச.8-–

சென்னை மாநகராட்சி சார்பில் ‘மெரினாவில் கலைவிழா’ என்ற பெயரில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் வாரந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை தோறும் நடத்தப்படும் இந்த நிகழ்வு கடந்த வாரம் ‘டிட்வா’ புயல், கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. சென்னை இயல்புநிலைக்கு திரும்பியநிலையில், நேற்று மாலை மெரினாவில் உள்ள நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் வழக்கம்போல ‘கலைவிழா’ களைகட்டியது.

தமிழகத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்கள். சிலம்பாட்டம், தப்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், பெரியமேளம், கிராமிய பாடல், துடுப்பாட்டம், சென்னையின் சிறப்புமிக்க ‘கானா’ உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த கலை நிகழ்ச்சியில், பத்மநாபன் கலைக்குழுவினரின் கரகாட்டம் மற்றும் காவடியாட்டமும், பாலமுருகன் கலைக்குழுவினரின் பெரிய மேளமும், சுதாகர் கலைக்குழுவினரின் கைச்சிலம்பாட்டமும், ராஜ் கலைக்குழுவினரின் தப்பாட்டமும், ஆர்.கணேசன் கலைக்குழுவினரின் கிராமியப் பாடல்களும், விஜயகுமார் கலைக்குழுவினரின் துடும்பாட்டமும் உள்ளிட்ட கலை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

தப்பாட்டம், குத்தாட்டம்

இந்த கலை நிகழ்ச்சிகளில் 70க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்று சிறப்பாக கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

தப்பாட்டத்தின் இசைக்கேற்ப குழுமியிருந்த சிறுவர்கள் போட்ட குத்தாட்டம் காண்போர் மனதை வெகுவாக கவர்ந்தது. இதை பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் படமாக்கியதையும் காணமுடிந்தது.

இந்தநிகழ்ச்சியில் முதலமைச்சரின் தனிச்செயலாளர் சண்முகம் கலந்து கொண்டு கலைஞர்களை பாராட்டி பேசினார். சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *