சென்னை, ஜன. 26–
நாடு முழுவதும் 77வது குடியரசு தினம் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக கவர்னர் ஆர்.என். ரவி சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை அருகே நடந்த கோலாகல விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
காலை 7.52 மணிக்கு விழாப்பகுதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தடைந்தார். காரின் முன்னும் பின்னும் போலீசாரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ முதலமைச்சர் அழைத்து வரப்பட்டார். பொதுமக்களுக்கும், விழா பந்தலில் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களுக்கும் அவர் கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். அணி வணக்கம் ஏற்கும் மேடை அருகே முதலமைச்சரை தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரவேற்றார்.

தேசிய கொடியை ஏற்றுவதற்காக காலை 7.54 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, மனைவி லட்சுமி ரவியுடன் வருகை தந்தார். அவர், விமானப்படையினர் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வரப்பட்டார். அவர் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு கையசைத்து வாழ்த்து தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, 7.58 மணிக்கு அணி வணக்கம் ஏற்கும் மேடைக்கு அருகே வந்த கவர்னர் ஆர்.என்.ரவியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி வரவேற்றார். இதையடுத்து தென்னிந்திய பகுதிகளின் ராணுவ மேஜர் ஜெனரல் ஸ்ரீநிவாஸ், கடற்படை அதிகாரி சதீஷ் எம்.ஷெனாய், தாம்பரம் வான்படை நிலைய தலைமை அதிகாரி ஏர் கமோடர் தபன் சர்மா, கடலோர காவல்படை (வடக்கு) கமாண்டர் டிஐஜி பாலகிருஷ்ணன் முருகன், காவல்துறை தலைமை இயக்குனர் ஜி.வெங்கடராமன், காவல் துறை கூடுதல் தலைமை இயக்குனர் மஹேஷ்வர் தயாள், சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஏ.அருண் ஆகிய உயர் அதிகாரிகளை கவர்னருக்கு முதல்வர் அறிமுகப்படுத்தி வைத்தார்.

தேசிய கொடி ஏற்றினார்
இதனை தொடர்ந்து காலை 8 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மூவர்ணக்கொடியை (5வது முறையாக) கவர்னர் ஆர்.என். ரவி ஏற்றினார். அப்போது ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பூ மழை தூவப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கவர்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், முப்படையை சேர்ந்த அதிகாரிகள், அரசு மற்றும் போலீஸ்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மக்கள் என பலரும் தேசியக்கொடிக்கு ‘சல்யூட்’ செய்தனர்.
அணிவகுப்பு
பின்னர் கவர்னர் ஆர்.என் ரவி, முப்படையினரின் அணி வணக்க மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்திய விமானப்படை, கடற்படை, ராணுவ கூட்டுக்குழல் முரசு இசைப் பிரிவினர், கடலோர காவல்படை, ராணுவ படை ஊர்தி, கடற்படை ஊர்தி, வான்படை ஊர்தி, கடலோர காவல்படை ஊர்தி, சி.ஐ.எஸ்.எப். படை, முன்னாள் ராணுவத்தினர் படைப்பிரிவு, தமிழ்நாடு காவல்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் பெண் படை, தமிழ்நாடு ஆயுதப் படையினரின் பேரிடர் மீட்புப் படை, கர்நாடக சிறப்பு காவல்படை, தமிழ்நாடு கமாண்டோ படை, கடலோர காவல் பாதுகாப்புப் படை, நீலகிரி படைப்பிரிவு, குதிரைப் படை, வனத்துறை பிரிவினர், சிறைத்துறை பிரிவினர், தீ அணைப்பு மற்றும் மீட்புப் படை பிரிவினர், ஊர்க்காவல் ஆண்கள் படைப் பிரிவினர், பள்ளி மாணவர்களின் கூட்டுக்குழல் இசை அணிவகுப்பு உட்பட 30 படைப்பிரிவினர் கம்பீரமாக அணிவகுத்து வந்து கவர்னருக்கு மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து, அணி வகுப்பு மேடைக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு சாதனைகளை புரிந்தோருக்கு விருதுகளை வழங்கினார். வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது, காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், சிறந்த போலீஸ் நிலையத்திற்கான கோப்பைகள் ஆகியவற்றை உரியவர்களுக்கு முதலமைச்சர் வழங்கினார். பின்னர் பதக்கம் பெற்றோர் குழுவாக முதலமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

கண்கவர் நிகழ்ச்சிகள்
இதையடுத்து குடியரசு தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடர்ந்து பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் மங்கள இசை ஊர்தி உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் ஊர்திகள், அரசின் நலத்திட்டங்களை விவரிக்கும் வகையிலான வடிவமைப்புகளுடன் வலம் வந்தன. அணிவகுப்புகளை கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டு ரசித்தனர். பின் நாட்டுப் பண் இசைக்கப்பட்டு விழா இனிதே நிறைவடைந்தது.
விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், உயர்நீதிமன்ற நீதிபதி, கடற்படை அதிகாரி, தாம்பரம் வான்படை நிலைய தலைமை அதிகாரி, கிழக்கு கடலோர காவல்படை கமாண்டர், தமிழக காவல்துறை தலைவர், காவல் கூடுதல் தலைமை இயக்குநர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குடியரசு தின நிகழ்ச்சியை முன்னிட்டு மெரீனா கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதோடு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
![]()





