செய்திகள்

முழு தகவல் தெரியாமல் பேசக் கூடாது; ராகுலுக்கு மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு பதிலடி

Makkal Kural Official

புதுடில்லி, டிசம்பர் 7:
இண்டிகோ விமான சேவைகள் ரத்து விவகாரம் தொடர்பாக முழு தகவல் அறியாமல் கருத்து கூறக் கூடாது என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு.

இது குறித்து அவர் அளித்த விளக்கத்தில்,
“இது அரசியல் விவகாரம் அல்ல; பொதுமக்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்னை. போட்டியை அதிகரிக்கவும், ஒப்பந்தச் செலவுகளை குறைக்கவும், புதிய விமானங்களை அனுமதிக்கும் விதமாக சட்ட திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். நாட்டில் விமான சேவைகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த துறையில் புதிய நிறுவனங்கள் நுழைய அரசு ஆதரவு வழங்கி வருகிறது. முழு தகவல் தெரிந்த பிறகே கருத்து தெரிவித்தால் நல்லது,” என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஆறு நாட்களாக, ஊழியர்கள் போராட்டம் உள்ளிட்ட பல காரணங்களால் இண்டிகோ விமான சேவைகள் பெருமளவில் ரத்து செய்யப்பட்டு, பயணிகள் பலர் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது பதிவில்,
“இண்டிகோ நிறுவனத்தின் செயல்பாடு தடுமாறுவதற்கு காரணம் மத்திய அரசின் அணுகுமுறையே. அதிக ரத்து, தாமதம், உதவியின்மை காரணமாக சாதாரண மக்கள் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள். இந்தியா அனைத்து துறைகளிலும் நியாயமான போட்டியைப் பெற தகுதியுடையது,” என்று குற்றஞ்சாட்டினார்.

அவரது இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர், விமானத் துறையில் போட்டி அதிகரிக்கவும், பொதுமக்கள் நலனே முன்னுரிமை என்றும் வலியுறுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *