சென்னை, ஜூலை 21–
அண்ணா தி.மு.க.வில் இருந்து முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவை நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனையடுத்து அவர் தி.மு.க.வில் இணைந்தார்.அண்ணா தி.மு.க.வில் இருக்கும் சிறுபான்மைச் சமூகத்து மக்களின் பிரதிநிதியாக இருந்த அன்வர் ராஜாவுக்கு, 2001ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அமைச்சர் பதவி கிடைத்தது. தொழிலாளர் நலத்துறை அமைச்சராகச் செயல்பட்டார். 2014 மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அன்வர் ராஜா, ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு சசிகலாவின் பக்கம் நின்றார். பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு என்னும் நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.
முன்னாள் எம்.பி.யும், முன்னாள் அமைச்சரும், அண்ணா தி.மு.க. அமைப்புச் செயலாளர்களில் ஒருவருமான அன்வர் ராஜா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பா.ஜ.க.வுடன் அண்ணா தி.மு.க. கூட்டணி அமைத்ததில் இருந்து அன்வர் ராஜா அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்வர் ராஜா அளித்த பேட்டி ஒன்றில், “தமிழ்நாட்டில் காலூன்ற துடிப்பது பா.ஜ.க.வின் எண்ணம். அது ஒருக்காலும் நடக்காது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து” என்று கூறியிருந்தது தமிழக அரசியல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. விரைவில் அன்வர் ராஜா அண்ணா தி.மு.க.விலிருந்து விலகி, தி.மு.க.வில் சேருகிறார் என்று சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை தி.மு.க.வில் இணைவதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்தார் அன்வர் ராஜா. இந்த செய்தி ஊடகங்களில் வெளியான சில நிமிடங்களில் அன்வர் ராஜாவை அண்ணா தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் அண்ணா அறிவாலயம் வந்த அன்வர் ராஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கிய நாள் முதலே அண்ணா தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக இருந்தவர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் ராஜா. அவருக்கு 1986-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தான் முதன்முறையாக வாய்ப்பளித்தார் எம்ஜிஆர். அண்ணா தி.மு.க. மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்த தேர்தல் அதுதான். தி.மு.க. ஆதரவு அலை வீசிய அந்த உள்ளாட்சித் தேர்தலில், மண்டபம் ஊராட்சி ஒன்றியத் தலைவராக வெற்றிபெற்றார் அன்வர் ராஜா. பின்னர், மதுரையில் நடந்த எம்.ஜி.ஆர். மன்ற மாநாட்டில் அன்வர் ராஜாவை அழைத்துப் பேசவைத்த எம்.ஜி.ஆர்., அண்ணா தி.மு.க.வின் அதிகாரம் வாய்ந்த குழுக்களுள் ஒன்றான 15 பேர் கொண்ட ஆட்சிமன்றக் குழுவில் அன்வர் ராஜாவையும் சேர்த்துக்கொண்டார். அவர்களில் 13 பேர் அமைச்சர்கள். அமைச்சர்கள் அல்லாத இருவர், அன்வர் ராஜாவும் ஜெயலலிதாவும் மட்டுமே. எம்ஜிஆரின் மறைவுப் பிறகு அண்ணா தி.மு.க. உடைந்தபோது ஜானகி பக்கம் நின்றார் அன்வர் ராஜா. 1989 சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. ஜானகி அணி வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பிறகு, ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று அண்ணா தி.மு.க.வில் இணைந்தார். அந்த நாள் தொடங்கி, வென்றாலும் தோற்றாலும் அண்ணா தி.மு.க.வே என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவர்
2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால், அண்ணா தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே பேசி வந்த அன்வர் ராஜாவுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை.
இதனிடையே அண்ணா தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை தேவை என்று கூறி, எடப்பாடியை விமர்சித்ததுடன் சசிகலாவுக்கு ஆதரவாக பேட்டி அளித்ததால் கடந்த 2021-ல் அண்ணா தி.மு.க.விலிருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி எடப்பாடி முன்னிலையில் மீண்டும் அண்ணா தி.மு.க.வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()





