செய்திகள் முழு தகவல்

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடும் கண்டனம்

Makkal Kural Official

சென்னை, டிச.15:

மக்களின் நாடித் துடிப்பை அறியாமல், ஏராளமான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர் இடங்கள் காலியாக உள்ள நிலையில், ‘மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலிப் பணியிடங்களே இல்லை’ என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் பொய் சொல்கிறார் என முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அண்ணா தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி. விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

‘தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வுத் துறையில், மருத்துவமனைகள் உட்பட பல அலுவலகங்களில் காலிப் பணியிடங்களே இல்லை’ என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் ‘முழு பூசணிக்காயை தட்டுச் சோற்றில் மறைக்க முயற்சிப்பது போல்’ பொய் சொல்லி இருக்கிறார்.

ஆரம்ப சுகாதார நிலையம் முதல் மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் போன்றவற்றில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருந்தாளுநர்கள் இல்லையென்று, அரசு மருத்துவமனைகளையே நம்பி இருக்கும் ஏழை, எளிய மக்கள் புலம்புகின்றனர். தங்களின் விளம்பரங்கள் மூலமும், வாய் ஜாலங்கள் மூலமும், அப்பாவி மக்களை ஏமாற்றிவிடலாம் என்று இந்த ஆட்சியாளர்கள் மனப்பால் குடித்துக்கொண்டு அலைகிறார்கள்.

தமிழக சுகாதாரத் துறையில் போதிய மருத்துவர்கள் இல்லாமலும், பல மருத்துவப் பணியிடங்கள் காலியாகவும் இருப்பது குறித்த நிகழ்வுகளில் ஒருசில-

பணி இடங்கள் காலி

காங்கேயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல பணியிடங்கள் காலியாக உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே, பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சுகாதார வளாகம், நான்கு ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராததால் முட்புதர்கள் மண்டி மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மத்திய அரசு உதவியுடன் தேன்கனிக்கோட்டையில் ரூ. 20 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவக் கட்டிடம் இன்னும் திறக்கப்படவில்லை. ஓசூர் மாநகரில் சுமார் ரூ. 100 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மருத்துவமனைக் கட்டிடம் இதுவரை திறக்கப்படவில்லை. இம்மருத்துவமனைக்கு, மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியிடங்கள் இதுவரை அரசால் உருவாக்கப்படவில்லை.

திருவள்ளூர் மாவட்டம், வெள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, வெள்ளியூர் பாரதியார் நகரைச் சேர்ந்த தியாகராஜன்-ஆனந்தி தம்பதியர், தங்களது 6 மாத கைக்குழந்தையான ஜோதிகாஸ்ரீ-க்கு காய்ச்சல் ஏற்பட்டதால், அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு வெறும் 2 மாத்திரைகளை மட்டும் கொடுத்து வீட்டிற்கு அனுப்பிய நிலையில், குழந்தை திடீரென உயிரிழந்துள்ளது.

திருத்தணி, வி.சி.ஆர். கண்டிகை கிராமத்தில் 2023–-24ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகத்தை, சீரமைப்புப் பணிகள் முடிந்தும் இதுவரை திறக்கப்படாமல் பூட்டியவாறே கிடப்பில் போட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடலூர் மாவட்டம், மதுராந்தகநல்லூரில் புதிதாக திறக்கப்பட்ட, புதன் கிழமை மட்டும் செயல்படும் துணை சுகாதார நிலையத்தால் எவ்வித பயனும் இல்லையெனவும், அவசர சிகிச்சை மற்றும் கூடுதல் மருத்துவ வசதிக்காக 10 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

துறையூர் அடுத்த சேனப்பநல்லூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிரந்தர செவிலியரை பணியமர்த்த வலியுறுத்தி ‘உங்களுடன் முதல்வர் முகாமில்’ பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்.

புவனகிரி அருகே மேல்வளையமாதேவியில், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட அரசு துணை சுகாதார நிலையம் திறக்கப்படாமல் உள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

செங்கல்பட்டு அருகே தமிழ் நாடு அரசு சுகாதார போக்குவரத்துத் துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நீண்ட காலமாக காலிப் பணியிடங்களை நிரப்பாமல் சுகாதாரத் துறையினர் அலட்சியம் காட்டி வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.

மருத்துவர் இல்லாததால் உயிரிழப்பு

கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருவதாகக் கூறப்படுகிறது. சுமார் 4,500 செவிலியர் பணியிடங்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் இதுவரை நிரப்பப்படவில்லை.

அம்மாவின் அரசில், கொரோனா காலத்தில் தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்களே இதுவரை பணிபுரிந்து வருகின்றனர். 2,500 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதுவரை நிரப்பப்படவில்லை.

பொது சுகாதாரத் துறையில் 3500 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. எ.என்.எம். முடித்தவர்கள் பலபேர் இருக்கும் நிலையில் இவர்களைக் கொண்டு இப்பணியிடங்களை விடியா திமுக அரசு இதுவரை நிரப்பவில்லை. இதனால், டெங்கு, கொசு ஒழிப்பு பணிகள், முத்துலட்சுமி ரெட்டி உதவித் திட்டம், தடுப்பூசித் திட்டம் போன்ற பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பொதுவாக, மருத்துவ மேல்படிப்பு படிக்கும் பி.ஜி. மருத்துவர்கள் கட்டாயமாக 2 வருட ஒப்பந்தத்தில் பணிபுரிய வேண்டும். இவ்வாறு 2 வருட ஒப்பந்தத்தில் பணிபுரியும் மருத்துவர்களை, திமுக அரசு நிரந்தரப் பணியிடத்தில் காட்டுகிறது.

அதுபோலவே, மற்ற தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் படிக்கும் பி.ஜி. மாணவர்கள் 3 மாதம் கட்டாய அரசு மருத்துவமனை பயிற்சி (பெரி பெரல் பயிற்சி) மாணவர்களையும் அரசு மருத்துவர்களாக கணக்கில் கொள்வது.

மாவட்ட சுகாதார சங்கம் மற்றும் தேசிய நல்வாழ்வு திட்டம் மூலம் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களால் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நிரப்பப்படும் பணியிடங்களையும், நிரந்தர மருத்துவப் பணியாளர்களாக கணக்கிடுகிறது விளம்பர மாடல் ஸ்டாலின் அரசு.

கும்பகர்ணத் தூக்கத்தில்…

மொத்தத்தில், திமுக ஆட்சியில், கடந்த 55 மாத காலமாக ஓரிரண்டு தேர்வுகளை மட்டுமே நடத்திவிட்டு, கும்பகர்ணத் தூக்கத்தில் உள்ளது மருத்துவப் பணியாளர் தேர்வாணையம். ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதுபோல், மொத்தத் துறையின் அவலங்களுக்கும் மேற்கண்டவை முத்தாய்ப்பாக உள்ளன.

எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல்’ இந்த அதிமேதாவி பதவி வகிக்கும் துறையே, கடந்த நவம்பர் மாதம் 21-ஆம் தேதி காலியாக உள்ள 1100 மருத்துவர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று, மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் விளம்பரம் செய்துள்ளது. தமிழகத்தின் மருத்துவத் துறை இந்த லட்சணத்தில் இருக்கும்போது, பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமே இருண்டுவிட்டது’ என்று சொல்வதுபோல, தன்னுடைய துறையை கவனிப்பதைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்யும் மா. சுப்பிரமணியம் சாரின் தலைமையில் மக்கள் நல்வாழ்வுத் துறையில் அரசு மருத்துவமனைகளையே நம்பி இருக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், வரும் தேர்தலில் திமுக அரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

எஞ்சியுள்ள 5 மாத ஆட்சிக் காலத்திலாவது அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ள ஏழை, எளிய மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம் என்று இந்த ஏமாற்று மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *