செய்திகள்

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று வினியோகம் செய்யும் ‘தாயுமானவர் திட்டம்’

Makkal Kural Official

சென்னை, ஆக.12–

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகர் மற்றும் அன்னை சத்யா நகரில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்த பயனாளிகளின் இல்லங்களுக்கு நேரில் சென்று ரேசன் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்து, முதலமைச்சரின் தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மக்கள் நலன்சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளைச் சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,969 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்தினாளிகளும், என மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களுக்கே சென்று குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சனி, ஞாயிறுகளில்…

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களின் விவரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையிடமிருந்து பெறப்பட்டு, கள அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்களுடன் மூடிய வாகனங்களில் குடிமைப் பொருட்களைப் பாதுகாப்பாகத் தகுதியுள்ள பயனாளர்களின் இல்லத்திற்கே சென்று நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் விநியோகிப்பர்.

70 வயதுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கே சென்று குடிமைப் பொருட்கள் வழங்கும் இத்திட்டத்திற்கு அரசுக்கு 35.92 கோடி ரூபாய் செலவாகும். மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம், நலிவுற்ற பிரிவினரின் வாழ்வாதாரத்தை சிறப்புறச் செய்வதுடன் அவர்தம் உணவுப் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

வீட்டுக்கு நேரில் சென்று

வழங்கினார் முதல்வர்

சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகர் மற்றும் அன்னை சத்யா நகரில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்த பயனாளிகளின் இல்லங்களுக்கு முதலமைச்சர் இன்று நேரில் சென்று ரேசன் பொருட்களை வழங்கி, முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்து, பயனாளிகளிடம் உரையாடினார். அப்போது முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கு வீடு தேடி வந்து ரேசன் பொருட்களை வழங்குவதால், மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது என்றும், குடும்பத்தில் ஒருவராக தங்களது சிரமங்களை அறிந்து இத்திட்டத்தை செயல்படுத்தியதற்காக முதலமைச்சருக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

முதலமைச்சரால் இன்றையதினம் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்“ சென்னையில் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில், மாவட்டங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில், அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜே. எபினேசர், இரா. மூர்த்தி, ஆர்.டி. சேகர், தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், அ.வெற்றியழகன், கே.பி. சங்கர், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், கூட்டுறவு துறை முதன்மைச் செயலாளர் சத்ய பிரதா சாகு, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் க.நந்தகுமார், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அ. ஜான் லூயிஸ், நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குநர் எஸ். சிவராசு, கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் சா.ப. அம்ரித், சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப. ரங்கநாதன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *