செய்திகள்

முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த சீமான்

Makkal Kural Official

சென்னை, ஜூலை.21-–

மு.க.முத்து மறைவையொட்டி, சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சீமான் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர்

இதற்கிடையே சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நேரில் சந்தித்து வருத்தத்தையும், ஆறுதலையும் பகிர்ந்து கொண்டார்.

பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-–

அரசியல், கொள்கை, நிலைப்பாடுகளை தாண்டி உறவு என்று ஒன்று உண்டு. அழகிரியை நான் அண்ணன் என்றும், தயாளு அம்மாளை அம்மா என்றும்தான் கூறுவேன். அரசியல், கொள்கை, பாதை வெவ்வேறாக இருந்தாலும் பாசம் என்பது ஒன்றுதானே. நான் ஒரு முறை மயக்கம் அடைந்து கீழே விழுந்தபோது, செல்போனில் தொடர்புகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார்.

என் தந்தை இறப்புக்கும் அதேபோல் ஆறுதல் வார்த்தை கூறினார். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட மாண்பும், பண்பும். அந்த அடிப்படையில் வந்து, முதலமைச்சர்மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் என் துயரத்தையும் பகிர்ந்துகொண்டு செல்கிறேன்.

சாதிய தீண்டாமையைவிட அரசியல் தீண்டாமை இங்கு அதிகம் உள்ளது. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மகளை, தி.மு.க. மாவட்ட செயலாளர் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியுமா? இந்த இறுக்கத்தை தகர்த்த வேண்டும்.

தமிழன் இனத்துக்கு ஒரு மாண்பு, நாகரிகம், வாழ்க்கை முறை இருக்கிறது. காமராஜர் இறப்புக்கு அண்ணாதுரை அதிகமாக அழுததாக சொல்வார்கள்.

அதேபோல், ராஜாஜி, பெரியாருக்கு இடையே கருத்து முரண் அதிகம் இருந்தாலும், ராஜாஜி இறந்தபோது பெரியார்தான் அதிகம் அழுதார். கொள்கை, கோட்பாடு வேறு. மனித உறவும், மாண்பும் வேறு. இந்த இரண்டையும் சேர்த்து குழப்பி கொள்ளக்கூடாது.

மக்களுக்கு என்ன செய்வீர்கள்?

கூட்டணி ஆட்சி பற்றி ஒவ்வொரு முறையும் பேசுவதுதான். அ.தி.மு.க. ஆட்சி அமைக்க பிற கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. அந்த நேரத்தில் பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவில்தான் ஆட்சி அமைக்க முடியும் என்றால், கூட்டணி ஆட்சி பேச்சுக்கு வலிமை இருக்கிறது. அதுவே தனித்து வென்றுவிட்டால், அந்த பேச்சுக்கு இடம் கிடையாது. இந்த நிலைதான் தி.மு.க. தரப்பிலும், அ.தி.மு.க. தரப்பிலும் இருக்கும்.

கூட்டணி, ஓரணி, ஒரே ஆட்சி என எதில் வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் மக்களுக்கு என்ன செய்வீர்கள் என்பதுதான் இப்போது பிரச்சினை. அதனைத்தான் கவனிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதனையடுத்து சீமானிடம், ‘திராவிட கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க, நீங்கள் வெற்றி பெற்றிருந்து உங்களுடைய ஆதரவை கேட்டால் கொடுப்பீர்களா?’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘ராணுவத்துக்கு என்று ஒரு ரகசியம் இருப்பது போல், எல்லாவற்றும் ஒரு ரகசியம் இருக்கும். எல்லாவற்றையும் இப்போதே கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள். கொஞ்சம் பொறுங்கள். அவகாசம் கொடுங்கள்’ என்றார்.

த.வெ.க. தலைவர் விஜய்யுடன் சமீபத்தில் செல்போனில் பேசினீர்களா அல்லது நேரில் சந்தித்தீர்களா? என்று எழுப்பிய கேள்விக்கு, ‘அதற்கு அவசியம் ஏற்படவில்லை. அவர் பாதை மாறிவிட்டது. பயணமும் மாறிவிட்டது’ என்றார்.

இதேபோல் மு.க.முத்து மறைவையொட்டி, ஆம் ஆத்மி கட்சி தமிழ்நாடு மாநிலத்தலைவர் வசீகரன், டி.வி.எஸ். நிறுவனத்தலைவர் வேணு சீனிவாசன் மற்றும் அவருடைய மனைவி மல்லிகா சீனிவாசன் ஆகியோர் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். ஆறுதல் கூறியவர்களுக்கு ஸ்டாலின் நன்றி

மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் கூறியவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

எனது சகோதரர் மு.க.முத்து மறைவுக்கு நேரில் வந்து எங்களது துயரில் பங்கெடுத்து ஆறுதல் கூறிய செல்வப்பெருந்தகை, கே.பாலகிருஷ்ணன், தொல்.திருமாவளவன், பேராசிரியர் காதர் மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, வசீகரன், துரை வைகோ, தமிழிசை சவுந்தரராஜன், கரு.நாகராஜன் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள்,

சத்யராஜ், விக்ரம் உள்ளிட்ட கலைஞர்கள் – ஊடகவியலாளர்கள், நேரில் வர முடியாத சூழலில் தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரிவித்த ராகுல் காந்தி, ஓ.பன்னீர்செல்வம், ஜி.கே.வாசன் மற்றும் எனது இல்லம் தேடி வந்து ஆறுதல் தெரிவித்த சீமான் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *