சென்னை, ஜூலை 24–
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் இன்று தெரிவித்தார்.
மேலும், ஆஞ்சியோ பரிசோதனையில் முதல்வருக்கு அடைப்பு எதுவும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்ததாக துரைமுருகன் கூறியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த திங்கட்கிழமை காலையில் வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ள சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் முதலமைச்சர் 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என்றும் அவருக்கு மேலும் பல பரிசோதனைகள் செய்ய வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சுமார் 2½ மணி நேரம் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகு மீண்டும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் முதலமைச்சருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் சில நாள்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியதன்பேரில் அவர் மருத்துவமனையில் இருந்தே அலுவல் பணிகளைக் கவனித்து வந்தார். நேற்று மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
ஆஞ்சியோ பரிசோதனை
4-வது நாளாக இன்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர் சிகிச்சையில் உள்ளார். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வீடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் துரைமுருகன் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:- ”முதல்வருக்கு இன்று காலை ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு அடைப்பு எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். முதலமைச்சர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பதை மருத்துவர்களே சொல்வார்கள் எனத் தெரிவித்தார்.
![]()





