சென்னை, ஜன. 21–
பிரதமர் நரேந்திர மோடி 23–ந் தேதி தமிழகம் வரவுள்ளதையொட்டி சென்னையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றவுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இதற்காக பிரதமர் திருவனந்தபுரத்தில் இருந்து வரும் 23-ம் தேதி பகல் 1.15 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு, நண்பகல் 2.15 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு, மாலை 3 மணிக்கு மதுராந்தகம் பொதுக்கூட்ட திடலுக்கு செல்கிறார். மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மாலை 4.30 மணிக்கு அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வருகிறார்.
அங்கிருந்து மாலை 5.05 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார். பிரதமரின் வருகையையொட்டி டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) ஏஐஜி அமி சந்த் யாதவ் தலைமையிலான குழுவினர் சென்னை விமான நிலையம் வந்துள்ளனர். நேற்று அந்த குழுவினர், விமான நிலையத்தில் பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தினர். அந்த கூட்டத்தில் சென்னை மாநகர போலீஸ், மத்திய தொழில் பாதுகாப்புப் படை, மாவட்ட வருவாய்துறை, சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள், மத்திய, மாநில உளவுப் பிரிவினர், முக்கிய பிரமுகரின் பாதுகாப்பு அதிகாரிகள், மருத்துவம் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் மீனம்பாக்கம் மற்றும் கிண்டி ஆகிய இடங்கள் ‘சிவப்பு மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
23–ந் தேதி பிரதமர் சென்னைக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மீனம்பாக்கம் மற்றும் கிண்டி ஆகிய பகுதிகள் “சிவப்பு மண்டலமாக” அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அரசு ஏற்பாடுகளைத் தவிர, அந்த பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்க விடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
மேலும், 2023 ஆம் ஆண்டு, பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா பிரிவு 163ன் கீழும், 2023 ஆம் ஆண்டு பாரதிய நாகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா பிரிவு 14ன் உட்பிரிவு (2) கீழும், ட்ரோன்கள், ரிமோட் மூலம் இயக்கப்படும் மைக்ரோ லைட் ஏர்கிராஃப்ட் பாரா கிளைடர்ஸ், பாரா மோட்டார்ஸ், ஹேன்ட் கிளைடர்ஸ், ஹாட் ஏர் பலூன்கள் போன்றவற்றை சென்னை பெருநகரில் பறக்க விட 21.12.2025 முதல் 18.02.2026, வரை தடை செய்யப்பட்ட ஆணை ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்று சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறி்க்கையில் கூறப்பட்டுள்ளது.
![]()





