தர்மபுரி, ஜூலை.20
-மேட்டூர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவை, 120 அடியை எட்டியது. அணையில் இருந்து வினாடிக்கு 31,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்து சேர்ந்தது. இந்த நீர்வரத்து அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
இந்தநிலையில் கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அதன்படி நேற்று மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 32 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (ஜூலை 20) காலை முதல் வினாடிக்கு 31 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 31,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நடப்பாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவை, 120 அடியை எட்டியது.
மேட்டூர் அணை மூன்றாவது முறையாக நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதேநேரத்தில், நீர்வரத்து 31 ஆயிரம் கன அடியாக உயர்ந்த நிலையில், 16 கண் மதகுகள் வழியாக அதிகமான உபரி நீர் திறக்கப்பட உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
![]()





